அமீரக செய்திகள்

UAE: காரை 10,000Dhs-ற்கு விற்றவருக்கு வாங்கியவரால் வந்த சோதனை.. 16,500 திர்ஹம்ஸ் அபராதம்.. காரணம் என்ன..??

ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய எமிரேட்டான அபுதாபியில் உள்ள அல் அய்ன் நகரத்தின் குடியிருப்பாளரிடம் இருந்து சுமார் 10,000 திர்ஹம் செலுத்தி காரை வாங்கிய நபர், வாகன விற்பனையாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்டவாறே இருக்கும் நிலையில், போக்குவரத்து விதிமீறல்களுக்காக சுமார் 16,510 திர்ஹம்களை அபராதமாக குவித்துள்ளார்.

இதனால், காரை விற்ற விற்பனையாளர் உடனடியாக அல் அய்ன் சிவில் நீதிமன்றத்தில் காரை வாங்கியவருக்கு எதிராக புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரின்படி, காரை தன்னிடமிருந்து வாங்கி சாலைகளில் விதிகளை மீறி ஓட்டிச் சென்றவரின் பெயருக்கு அனைத்து போக்குவரத்து அபராதமும் மாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

புகார்தாரரிடம் இருந்து 10,000 திர்ஹம்களுக்கு காரை வாங்கிய நபர், கார் அதனை விற்ற நபரின் பெயரிலேய பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் தொடர்ந்து அவ்வாறே அதைப் பயன்படுத்த அனுமதி கோரியுள்ளார். பின்னர் காரை ஓட்டும்போது தொடர்ச்சியாக செய்த போக்குவரத்து விதி மீறல்களுக்கு விதிக்கப்பட்ட 16,510 திர்ஹம் அபராதத்தை செலுத்த மறுத்துள்ளார்.

இதுவே காரை விற்றவருக்கு பெரிதும் சிக்கலாகவும், அவர் செலுத்த வேண்டிய அபராதத்தை நீதிமன்றம் வரை இழுத்து பணம் செலுத்தவும் தூண்டுதலாய் இருந்துள்ளது. அதேசமயம், வாகனப் பதிவு உரிமத்தின் நகல், காரில் பதிவு செய்யப்பட்ட போக்குவரத்து அபராத நகல் உள்ளிட்ட ஆவணங்களையும் மனுதாரர் நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், உடனடியாக ஆஜராகும்படி, நீதிமன்றம் அழைத்தும் அந்த நபர் விசாரணைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு அமீரக போக்குவரத்துச் சட்டத்தின் படி, வாகனம் தொடர்பான எந்தவொரு செயலையும் பதினான்கு நாட்களுக்குள் உரிமம் வழங்கும் ஆணையத்திடம் அறிவிக்க வேண்டும். அதுபோல, உரிமம் மற்ற தரப்பினருக்கு மாற்றப்படும் வரை வாகனத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அசல் உரிமம் வைத்திருப்பவர் பொறுப்பேற்க வேண்டும்.

எனவே, முழுமையாக வழக்கை விசாரித்த நீதிபதி, காரை விற்பனை செய்யும்போது விற்பனையாளர் சரியான நடைமுறைகளை பின்பற்றவில்லை என்பதால், வாங்கியவரின் சட்டச் செலவுகளை புகார்தாரர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!