ADVERTISEMENT

UAE: சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிக்க இனி எங்கும் அலைய தேவையில்லை.. கையில் ‘Botim’ ஆப் இருந்தாலே போதும்..

Published: 3 Mar 2023, 5:45 PM |
Updated: 3 Mar 2023, 6:25 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரபல இலவச வீடியோ கால் ‘ஆப்’பான Botim, UAE சுற்றுலா விசாக்களுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஆன்லைன் பயண முகவரான
https://musafir.com/ உடன் கூட்டு சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இதில் விசா கட்டணமாக 450 திர்ஹம்கள் தொடக்க விலையாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளன. எனவே, Botim செயலியானது இனி 30 முதல் 60 நாள் வரையிலான சிங்கிள் மற்றும் மல்டிப்பிள் என்ட்ரி டூரிஸ்ட் விசாக்களுக்கு விண்ணப்பிக்க பயனர்களை அனுமதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

UAE-யில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் தங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் குறுகியகால பயணத்திற்காக நாட்டிற்குள் எளிதாக அழைத்துவர இந்த பயன்பாடு பெரிதும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் மற்ற வழிமுறைகள் விசா விண்ணப்பிக்கும் செயல்பாடுகளுக்கு அதிக செலவும், நேரமும் எடுத்துக் கொள்வதால் பெரும்பாலானோரின் விருப்பமாக Botim இருக்கும் என்று அதன் தாய் நிறுவனமான அஸ்ட்ரா டெக்கின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அப்துல்லா அபு ஷேக் அவர்கள் ஊடகங்களிடையே தெரிவித்துள்ளார்.

மேலும், விசா காலத்தை நீட்டிக்க விரும்பும் நாட்டில் உள்ள சுற்றுலாப் பயணிகளும் இந்த சேவையைப் பயன்படுத்தலாம் என்றும், அத்துடன், https://musafir.com/ இன் விசா விண்ணப்ப செயல்முறையானது விண்ணப்பதாரர்களுக்கு திறமையாகவும், தொந்தரவு இல்லாததாகவும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

Botim செயலியில் விசா விண்ணப்பங்களுக்கு 24 முதல் 72 மணிநேரம் வரை ஆகும். அதுபோல, எக்ஸ்பிரஸ் விண்ணப்பங்களுக்கான செயல்முறையை 24 மணி நேரத்திற்குள் முடிக்க முடியும். கூடுதலாக, இந்த ஆப் மூலம் பயனர் இலவச வீடியோ கால், மொபைல் டாப்-அப்கள், ரீசார்ஜ் சேவைகள் போன்றவற்றை அணுகலாம் என்றும் அபு ஷேக் தெரிவித்துள்ளார்.

செயலியின் புதிய அம்சங்களும் விண்ணப்பிக்கும் முறைகளும்:

https://musafir.com/ வழங்கும் செயலியில் உள்நுழைந்தவுடன், ‘visa service’ என்பதைத் தேர்வு செய்யும் பயனர்கள், அடுத்தபடியாக சுய விவரங்களை உள்ளிட்டு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தவுடன் பணம் செலுத்த வேண்டும். அதன்பிறகு, பயனர்கள் தங்கள் விண்ணப்ப நிலையை Botim செயலியில் கண்காணிக்கவும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா விசாவின் நகலைப் பெறவும் முடியும் என்று கூறிய அபு ஷேக், மேலும் இந்த செயலியில் ‘transaction history page’ என்ற புதிய அம்சம் இருப்பதால் பயனர்கள் இன்றுவரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களைப் பார்க்க முடியும் என்றும் விவரித்துள்ளார்.

ADVERTISEMENT

அத்துடன் செயலியில் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள பல்வேறு அம்சங்களில் பணப் பரிமாற்றங்கள் குறிப்பிடத்தக்கதாகும், ஏனெனில் வாடிக்கையாளர்கள் MoneyGram உடனான கூட்டாண்மை மூலம் சர்வதேச அளவில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பணத்தை பரிமாற்றம் செய்யலாம் மற்றும் துருக்கி-சிரியா நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடை அளிக்க ரெட் கிரேசன்ட் அமைப்புக்கு அனுப்பலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

பிரீமியம் வாடிக்கையாளர்கள்:

உலகின் எந்த மூலையிலும் வசித்து வரும் அனைவருக்கும் Botim முற்றிலும் இலவசம் எனினும், சில VIP பயனர்களுக்கு மேம்பட்ட தரத்தில் வீடியோ கால் சேவைகளை வழங்குவதற்கு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், இதன் மூலம் அவர்கள் HD தரத்தில் வீடியோ கால்களையும் விளம்பரமில்லா அனுபவத்தையும் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரவிருக்கும் அம்சங்களில் VIP புரொஃபைல் பேட்ஜ் மற்றும் பீட்டா ஆக்சஸ் (beta Access) சேர்க்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Botim செயலியில் பிரீமியம் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், அதன் வளர்ந்து வரும் 90 மில்லியன் பயனர்களுக்கு ஆடியோ கால் மற்றும் வீடியோ கால் வசதி இலவசமானதாக இருக்கும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.