அமீரக செய்திகள்

19 ஆம் நூற்றாண்டில் இருந்த துபாய்க்கு பயணம் செய்ய ஒரு வாய்ப்பு!! அல் ஷிந்தகா அருங்காட்சியகத்தை திறந்து வைத்த அமீரக பிரதமர்…

ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய பாரம்பரிய அருங்காட்சியகமான அல் ஷிந்தகா இப்போது வரலாற்றுச் சிறப்பு மிக்க துபாயில் திறக்கப்பட்டுள்ளது. இங்கு 80 வரலாற்று வீடுகள் மற்றும் 22 பெவிலியன்கள் உள்ள நிலையில், இந்தப் பகுதியே 310,000 சதுர மீட்டர் பரப்பளவில் திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கள்கிழமை (மார்ச்.6) அன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துணைத்தலைவரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் புதுப்பிக்கப்பட்ட அல் ஷிந்தகா அருங்காட்சியகத்தை திறந்து வைத்துள்ளார்.

திறப்பு நேரங்களும் டிக்கெட் விலையும்:

எமிராட்டியர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையை காட்சிப்படுத்தும் அருங்காட்சியகம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும், ஆனால் கடைசி நுழைவு இரவு 7 மணியுடன் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இங்கு வயது வாரியாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, எனவே பெரியவர்களுக்கான டிக்கெட்டுகளின் விலை 50 திர்ஹம் என்றும் மாணவர் நுழைவு டிக்கெட்டுகள் (5 முதல் 24 வயது வரை) 20 திர்ஹம் என்றும் விதிக்கப்பட்டுள்ளது.

அன்றிலிருந்து இன்றுவரை துபாயின் வளர்ச்சி:

பார்வையாளர்களின் கண்களுக்கு பாரம்பரிய எமிராட்டி வாழ்க்கை முறை மற்றும் இப்பகுதியின் வளமான கலாச்சார பாரம்பரியத்தின் காட்சிகளை இந்த அருங்காட்சியகம் வழங்குவதுடன், 1800 களில் உள்ள கண்காட்சிகளும் இங்கு உள்ளன. அதுமட்டுமின்றி, இந்த அருங்காட்சியகம் 19 ஆம் நூற்றாண்டிலிருந்து 1970கள் வரை துபாயின் பாரம்பரிய வாழ்க்கைமுறை மற்றும் இன்றைய நவீன பெருநகரமாக மாறியுள்ள துபாயின் பயணத்தை விளக்குவதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆளும் குடும்பத்தைப் பற்றிய ஆவணங்கள்:

அல் மக்தூம் குடியிருப்புப் பிரிவு துபாயை ஆளும் குடும்பத்தின் பாரம்பரியம் மற்றும் சாதனைகளை வெளிப்படுத்தும் விதமாக மறைந்த ஷேக் ரஷித் பின் சயீத் அல் மக்தூம் அவர்களின் அனுபவம் மற்றும் துபாயின் வளர்ச்சியில் அவரது பங்கு பற்றிய ஆவணங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், 19 ஆம் நூற்றாண்டில் துபாய் ஆட்சியாளர்கள் செயல்படுத்திய முக்கிய முடிவுகள் மற்றும் வரலாற்றுத் திட்டங்கள் பற்றிய கண்காட்சிகளையும் அல் மக்தூம் குடியிருப்பு கொண்டுள்ளது.

வேறு என்ன பார்க்கலாம்?:

அல் ஷிந்தகா அருங்காட்சியகத்தின் மற்ற பிரிவுகளில் துபாய் க்ரீக் (Dubai Creek)– ஒரு நகரத்தின் பிறப்பு, மக்கள் மற்றும் நம்பிக்கை, வளர்ந்து வரும் நகரம், வாசனைத் திரவியங்கள், பாரம்பரிய கைவினைப்பொருட்கள், அழகு மற்றும் அலங்காரம், பாரம்பரிய நகைகள், பாரம்பரிய சுகாதாரம், குழந்தைகள் இல்லம், கடல் கலாச்சாரம், சமூக கூடம், நிலத்தில் வாழ்க்கை, பாரம்பரியம் உணவு இல்லம் மற்றும் கவிதை இல்லம் போன்றவை குறித்த கண்காட்சிகளும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!