அமீரக செய்திகள்

செவிகளுக்கு விருந்தளிக்க இன்று முதல் துவங்கும் துபாய் மெட்ரோ மியூசிக் ஃபெஸ்டிவல்!! ஐந்து மெட்ரோ நிலையங்களில் ஒரு வாரக் கொண்டாட்டம்..!!

துபாய் அரசு ஊடக அலுவலகத்தின் (Government of Dubai Media Office – GDMO) ஒரு பிரிவான பிராண்ட் துபாய் (Brand Dubai), சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்துடன் (RTA) இணைந்து நடத்தும் துபாய் மெட்ரோ மியூசிக் பெஸ்டிவலின் மூன்றாவது பதிப்பு இன்று (மார்ச்.6) தொடங்கி மார்ச் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த உலகளாவிய இசையின் ஒரு வாரக் கொண்டாட்டமானது, உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள இசைக்கலைஞர்களை ஒன்றிணைத்து பல்வேறு இசை வகைகளை முன்னிலைப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மியூசிக் பெஸ்டிவல் துபாயின் ஐந்து மெட்ரோ நிலையங்களில் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை ஆரவாரமாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியூசிக் பெஸ்டிவல் நடைபெறும் மெட்ரோ நிலையங்கள்:

  1. யூனியன் (Union),
  2. மால் ஆஃப் எமிரேட்ஸ் (Mall of Emirates),
  3. புர்ஜுமன் (Burjuman),
  4. துபாய் ஃபைனான்சியல் சென்டர் (Dubai Financial Centre)
  5. சோபா ரியாலிட்டி (Sobha Realty)

மேலும், இந்த ஐந்து மெட்ரோ நிலையங்களிலும் சுமார் 20 இசைக்கலைஞர்களைக் கொண்ட ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட இசைக்குழு நிகழ்ச்சியை கோலாகலமாக நடத்துவதுடன் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் தயாரிக்கப்பட்ட சரம், தாளம், காற்று, ஒலி மற்றும் பிற அசாதாரண கருவிகளைக் கொண்டு இசை நிகழ்ச்சியில் பல்வேறு விதமான ஒலி மூலம் மெட்ரோ பயணிகளுக்கு இசை விருந்தளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இசை நிகழ்ச்சி குறித்து பிராண்ட் துபாயின் இயக்குனரான ஷைமா அல் சுவைதி அவர்கள் கூறுகையில், துபாயின் காஸ்மோபாலிட்டன் சமூகத்தை (cosmopolitan community)இசை மூலம் மகிழ்விப்பதற்காக பாரம்பரிய இசைக்கருவிகள் கொண்ட பாரம்பரிய இசைக்கலைஞர்கள் மற்றும் ஃப்யூஷன் இசைக்கலைஞர்களின் கலவையான இசை திருவிழாவின் மூன்றாவது பதிப்பை தொடங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், UAE 2023 ஐ ‘Year of Sustainability’என அறிவித்ததற்கு ஏற்ப இந்த ஆண்டு மியூசிக் பெஸ்டிவல் நிலைத்தன்மையின் கருப்பொருளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, #DubaiArtSeason இன் மிகச்சிறந்த அனுபவங்கள், நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளை காட்சிப்படுத்துவதில் கவனம் செலுத்தி வரும் #DubaiDestinations பிரச்சாரத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் இது ஒன்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் செய்யப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தி தங்கள் திறமையை வெளிப்படுத்த ஏராளமான இசைக்கலைஞர்கள் விழாவில் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஃபெஸ்டிவல் துபாயை ஒரு சர்வதேச கலாச்சார மையமாக பிரதிபலிப்பதுடன் இசை நிகழ்ச்சியை கண்டுகளிக்கவும் சிறந்த இடமாகத் திகழ்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!