அமீரக செய்திகள்

துபாய்: பயண நேரத்தை 104 நிமிடங்களில் இருந்து 16 நிமிடங்களாக குறைக்கும் RTA-வின் மெகா திட்டம்..!! எப்போது பயன்பாட்டிற்கு வரும்..??

துபாயில் செயல்படுத்தப்பட்டு வரும் அல்ஷிந்தகா காரிடார் மேம்பாட்டுத் திட்டம் நிறைவடைந்த பிறகு, 2030-க்குள் தேரா மற்றும் பர் துபாயைச் சுற்றிப் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் பயண நேரம் 104 நிமிடங்களிலிருந்து 16 நிமிடங்களாகக் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டத்தின் மூலம் சுமார் ஒரு மில்லியன் மக்கள் பயனடைவதுடன் இரண்டு தசாப்தங்களில் கிட்டத்தட்ட 45 பில்லியன் திர்ஹம்கள் வரை சேமிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அல்-ஷிந்தகா காரிடாரின் 4 ஆம் கட்டப் பணிகளுக்கான 800 மில்லியன் திர்ஹம் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.

இது குறித்து RTA இன் இயக்குநர் ஜெனரலும் தலைவருமான Mattar Al Tayer அவர்கள் பேசுகையில், 5.3 பில்லியன் திர்ஹம் மதிப்பீட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மிகப்பெரிய திட்டங்களில் இதுவும் ஒன்றாகும் எனவும், இது மொத்தம் 13 கிமீ பரப்பளவில் 15 இன்டர்செக்சன்களை அமைப்பதாகவும் கூறியுள்ளார். அதேவேளை, மிகப்பெரிய அளவில் திட்டமிடப்பட்டிருப்பதால் அதன் பணிகள் ஐந்து கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தேரா ஐலேண்ட், துபாய் சீ ஃப்ரண்ட் (sea front), துபாய் மரிடைம் சிட்டி மற்றும் போர்ட் ரஷீத் போன்ற பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் கூடுதலாக தேரா மற்றும் பர் துபாய் போன்ற பகுதிகளுக்கும் சேவை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, ஷேக் ரஷீத் சாலை, அல் மினா சாலை, அல் கலீஜ் ஸ்ட்ரீட் மற்றும் கெய்ரோ ஸ்ட்ரீட் வழியாக செல்லும் சுமார் 13 கிமீ நீளமுள்ள அல் ஷிந்தகா காரிடார் மேம்பாட்டுத் திட்டமானது சீரான போக்குவரத்து ஓட்டத்திற்கு பங்களிப்பதுடன் சாலைகளின் திறன் மற்றும் போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்துவதாக அல் தயர் கூறியுள்ளார்.

நான்காம் கட்டப் பணிகள்:

சுமார் 800-மில்லியன் திர்ஹம் செலவிலான நான்காம் கட்ட ஒப்பந்தம் மொத்தம் 3.1 கிமீ நீளமுள்ள மூன்று பாலங்களை உள்ளடக்கியது என்றும், மேலும் ஷேக் ரஷீத் சாலையில் ஷேக் கலீஃபா பின் சையத் ஸ்ட்ரீட்டில் இருந்து ஃபால்கன் இன்டர்சேஞ்ச் வரையிலான 4.8 கிமீ வளர்ச்சிப் பணிகளில் அனைத்து பாதைகளிலும் ஒரு மணி நேரத்திற்கு 19,400 வாகனங்களை நிறுத்தும் திறனை அல்மினா சாலைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முதல் பாலம் ஷேக் ரஷீத் சாலை மற்றும் ஃபால்கன் சந்திப்பு இடையே ஒரு சீரான போக்குவரத்து ஓட்டத்தை உறுதி செய்வதற்கு 1.33 கிமீ நீளமுள்ள 3-வழி சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இரு திசைகளிலும் ஒரு மணி நேரத்திற்கு 10,800 வாகனங்கள் வரை செல்லலாம். இரண்டாவது, ஃபால்கன் இன்டர்சேஞ்சிலிருந்து அல் வாஸ்ல் சாலைக்கு செல்லும் 780 மீட்டர் நீளமுள்ள மூன்று வழி பாலமாகும். இதில் 5,400 வாகனங்கள் கடந்து செல்ல முடியும். மூன்றாவதாக 985 மீட்டர் நீளமுள்ள இருவழிப் பாலம், இதில் ஒரு மணி நேரத்திற்கு 3,200 வாகனங்கள் ஃபால்கன் இன்டர்சேஞ்ச் திசையில் ஜுமைரா ஸ்ட்ரீட்டில் இருந்து அல் மினா சாலைக்கு பயணிக்கலாம்.

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம், அல் கலீஜ் ஸ்ட்ரீட்டில் இரண்டு பாலங்களை அமைப்பதற்கு ஃபால்கன் இன்டர்சேஞ்ச் மேம்பாட்டுத் திட்டம் போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் பணிபுரிந்து வருவதாகக் கூறியுள்ளது. அதன்படி முதல் பாலம் 750 மீட்டர் வடக்கிலும், இரண்டாவது பாலம் 1.075 கிமீ தெற்கிலும் நீண்டுள்ள நிலையில், இரு திசைகளிலும் ஒரு மணி நேரத்திற்கு 24,000 வாகனங்கள் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இரண்டு பாலங்கள் ஒவ்வொரு திசையிலும் ஆறு வழித்தடங்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன் காலித் பின் அல் வலீத் ஸ்ட்ரீட்டில் இருந்து அல் கலீஜ் ஸ்ட்ரீட் வரை ஒரு மணி நேரத்திற்கு 1,600 வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் 250 மீட்டர் நீளமுள்ள ஒற்றைப் பாதைப் பாலம் கட்டும் பணியும் இதில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல, காலித் பின் அல் வலீத் ஸ்ட்ரீட்டில் இருந்து அல் மினா ரோடு வரை இடதுபுறமாக 500 மீட்டர் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!