ADVERTISEMENT

துபாய் ஏர்போர்ட்டில் செக்-இன் செய்வது இனி ரொம்ப ஈஸி.. புதிய ‘ரோபோ சாரா’வை அறிமுகப்படுத்திய எமிரேட்ஸ் குழுமம்.. அப்படி என்ன ஸ்பெஷல்.?

Published: 11 Mar 2023, 11:55 AM |
Updated: 11 Mar 2023, 12:18 PM |
Posted By: Menaka

எமிரேட்ஸ் குழுமம் உலகின் முதல் ரோபோடிக் செக்-இன் முறையை அதன் தலைமையகத்தில் நடைபெற்ற ஸ்டார்ட்-அப் சூக்கில் வியாழன் அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. எமிரேட்ஸ் குழுமத்தால் சாரா என பெயரிடப்பட்டுள்ள இந்த கையடக்க ரோபோவானது ஆறு மொழிகளில் பேசக்கூடியது என்றும், செக்-இன் செய்வது மட்டுமின்றி பல்வேறு விதமாகவும் இந்த ரோபாவால் உதவ முடியும் என்றும் எமிரேட்ஸ் குழுமத்தின் COO அடெல் அல் ரெதா தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும் இந்த சாரா ரோபோவுக்கான சாத்தியங்கள் என்பது முடிவற்றவை என அல் ரெதா கூறியதுடன், சரியான நுழைவு அனுமதி மற்றும் விசாவைப் பெற்றுள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்த, குடியேற்றத்துடன் அதை இணைக்கக்கூடிய உயர் மட்டத்திற்கு இந்த ரோபோவை மேம்படுத்த திட்டமிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விமான பயணிகள் செக்-இன் செய்வதற்காக உலகிலேயே இது போன்ற ரோபோவை அறிமுகம் செய்த முதல் விமான நிறுவனம் எமிரேட்ஸ் என்று எமிரேட்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது. மேலும் சுமார் 200 க்கும் மேற்பட்ட ரோபோக்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் விமான நிலையங்களில் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்படும் எனவும் எமிரேட்ஸ் குழுமம் கூறியுள்ளது.

ADVERTISEMENT

இந்த அமைப்பு அடுத்த சில மாதங்களில் வெளிவரவிருக்கும் நிலையில், இது எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான செயல்முறை விளக்கம் அறிமுக நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இந்த ரோபோ அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான படிப்படியான விளக்கம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

படி 1: முதலில் பாஸ்போர்ட்டை சாரா ரோபோவில் ஸ்கேன் செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

படி 2: பின்னர், ரோபோவின் திரையில் சுட்டிக்காட்டப்படும் சதுரத்தின் மையத்தில் பயணிகள் அவர்களது முகத்தை காண்பித்து பதிவு செய்யவேண்டும், இது பாஸ்போர்ட்டில் உள்ள முக அம்சங்களைப் பொருத்தது.

படி 3: இதனையடுத்து, ஏற்கனவே உள்ள டிக்கெட் முன்பதிவு பாஸ்போர்ட்டுடன் பொருந்துவது உறுதிப்படுத்தப்பட்டு, பயணிகளுக்கு தேவையான கூடுதல் தகவல்களையும் சாரா வழங்குகிறது, அதாவது, விமானம் புறப்படும் நேரம், தற்போதைய வானிலை போன்ற விவரங்களை வழங்கும்.

படி 4: “செக்-இன் செய்யலாமா?” என்று கணினி கேட்கும்போது பயணிகள் செக்-இன் பொத்தானைக் கிளிக் செய்யலாம் அல்லது வாய்மொழியாக கட்டளை கொடுக்கலாம்.

படி 5: செக்-இன் முடிந்ததும் பயணிகளின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சலுக்கு போர்டிங் பாஸ் அனுப்பப்படும்.

ரோபோவின் டெவலப்பர்களின் கூற்றுப்படி, பயணிகளின் போர்டிங் பாஸ்கள் மற்றும் அவர்களுடைய பேக்கேஜ் டேக்களை (baggage Tags) கணினியில் பிரிண்ட் செய்வதற்கான தேர்வும் இந்த ரோபோவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், இது கையடக்க ரோபோ என்பதால் விமான நிலையத்தைப் பற்றி அறிமுகமில்லாத சுற்றுலாப் பயணிகள் மற்றும் போக்குவரத்துப் பயணிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என இதனை வடிவமைத்தவர்கள் தெரிவித்துள்ளனர். எடுத்துக்காட்டாக, ஒரு பயணி அவர் செல்லும் விமானத்திற்கான கேட் எங்கே என்று கண்டுபிடிக்க வேண்டும் எனில், ரோபோவை அணுகலாம், அது அவரது பயணச்சீட்டு விவரங்களை உடனடியாக காண்பிக்கும். அதன்பிறகு, அது பயணிகளிடம் அதை பின்தொடரச் சொல்லி குறுகிய வழியில் கேட்டுக்கு செல்லவும் உதவும் என்பது இதன் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.