அமீரக செய்திகள்

அமீரகத்தில் வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழை!! சாலைகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு… NCM வெளியிட்டுள்ள வீடியோ!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வியாழக்கிழமை (மார்ச்.1) அன்று சில பகுதிகளில் பெய்த பலத்த மழையில் ஆங்காங்கே ஆலங்கட்டிகள் தடிமனாகவும், கடினமாகவும் பெய்துள்ளன. இதனைத் தொடர்ந்து வானிலை தொடர்பான சமூக ஊடகத்தைக் கையாளும் புயல் மையம் (Storm Centre) வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளது. வீடியோ காட்சிகளின்படி, ஒரு கிளிப்பில் புஜைராவில் வெள்ளம் சூழ்ந்த சாலையில் தத்தளிக்கும் காரின் கண்ணாடிகளில் விரிசல் விழும் அளவிற்கு கடினமான ஆலங்கட்டிகள் மழையாகப் பெய்துள்ளது.

மற்றொரு வீடியோ காட்சியில், கொர்ஃபக்கானில் (Khorfakkan) உள்ள ஒரு பள்ளத்தாக்கு சாலையில் மழைநீர் ஓடுவதையும், கனமான நீரோட்டமானது அங்குள்ள குப்பைக் கண்டெய்னர்களைக் கொண்டு வருவது பதிவாகியுள்ளது. அடுத்த வீடியோவில், கோர் ஃபக்கனில் ஒரு மலையிலிருந்து பாய்ந்து வரும் தண்ணீரால் சாலையில் திடீரென வெள்ளம் ஏற்பட்டு, பின்னர் கார்களின் டயர் ஆழமான தண்ணீரில் சிக்கியதால் இரண்டு வாகனங்களும் பழுதாகியுள்ளன.

அத்துடன் சில குடியிருப்பாளர்கள் ஆலங்கட்டிகளை எடுத்து விளையாடுவதையும் வீடியோக்களில் பதிவு செய்துள்ளனர். ஆகவே, மோசமான வானிலை நேரத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகளை தவிர்க்குமாறு குடியிருப்பாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், புஜைராவில் ஏற்பட்ட கனமழை காரணமாக பள்ளத்தாக்குகளை நோக்கி விழும் பல்வேறு நீர்வீழ்ச்சிகளைக் காட்டும் காணொளிகளை தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்டுள்ளது. மேலும், ஷார்ஜாவின் டிப்பா, அல் ஹிஸ்ன், கொர்ஃபக்கான் மற்றும் புஜைராவின் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததாகவும் NCM தெரிவித்துள்ளது.

அதுபோல, வியாழன் (மார்ச்.2) அன்று உம் அல் குவைன், ராஸ் அல் கைமா மற்றும் அஜ்மான் ஆகிய இடங்களிலும் மழை பெய்துள்ளதாகவும் NCM தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, நாளையும் (மார்ச்.3) அமீரகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், குளிர்காலத்தின் கடைசி மாதமாகக் கருதப்படும் மார்ச் மாதத்தின் இரண்டாம் பாதியில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!