அமீரக செய்திகள்

துபாய்: தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ள ஆணையம்!!

துபாயின் அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் (Knowledge and Human Development Authority – KHDA) தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, துபாயில் உள்ள தனியார் பள்ளிகள், 2023-24 கல்வியாண்டுக்கான கல்விக் கட்டணத்தில் 3 சதவீதம் அதிகரிக்கத் தகுதி பெறும் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும், இது அமீரகத்தின் பொருளாதார நிலை, கல்வியின் தரம் போன்றவற்றை பராமரிக்கும் வேளையில் தனியார் பள்ளியை நடத்துவதற்கான செயல்பாட்டு செலவுகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு கட்டண உயர்வை KHDA அங்கீகரித்துள்ளது.

KHDA இன் அனுமதிகள் மற்றும் இணக்கத் துறையின் (Permits and Compliance Sector) CEO முகமது தர்விஷ் அவர்கள் கூறுகையில், பள்ளிக் கட்டணக் கட்டமைப்பானது பள்ளிக் கட்டணத்தில் அனுமதிக்கப்படும் எந்த மாற்றங்களுக்கும் ஏற்றவாறு பள்ளிகள் வழங்கும் கல்வியின் தரத்தை வலியுறுத்துவதாகவும், குடும்பங்களின் நிதி மற்றும் கல்வித் தேவைகளுக்கு பொருந்தக்கூடிய பள்ளிகளின் தேர்வை அவர்களுக்கு வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், துபாய் பள்ளிகள் ஆய்வு வாரியத்தின் (Dubai Schools Inspection Bureau) ஒவ்வொரு பள்ளியின் மிக சமீபத்திய ஆய்வு மதிப்பீட்டோடு பள்ளிகளின் கட்டண உயர்வு விகிதத்தை இணைத்துள்ளதால், வருடாந்திர மதிப்பீட்டில் குறையும் பள்ளிகள் எந்த கட்டண உயர்விற்கும் தகுதி பெறாது என்று கூறப்பட்டுள்ளது.

அதுபோல, பள்ளிக் கட்டணக் கட்டமைப்பின் கீழ், அதே ஆய்வு மதிப்பீட்டைப் பராமரிக்கும் தனியார் பள்ளிகள் தங்கள் கட்டணத்தை 3 சதவீதம் அதிகரிக்கத் தகுதி பெறும் என்றும், சமீபத்திய ஆய்வுகளின் போது தங்கள் மதிப்பீட்டை மேம்படுத்தும் பள்ளிகள், பள்ளிக் கட்டணக் கட்டமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முறையின்படி தங்கள் கட்டணத்தை அதிகரிக்கத் தகுதி பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாணவர்களுக்கு உயர்தரமான கல்வியை வழங்குவதற்கு பள்ளிகளின் தற்போதைய செயல்பாடுகளைத் தக்கவைத்துக்கொண்டு, நீண்டகால வளர்ச்சித் திட்டங்களை உருவாக்க அனுமதிக்கும் வகையில் இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், குடும்பங்களுக்கு மலிவு மற்றும் உயர்தரக் கல்வியைத் தேர்வுசெய்யும் வலுவான மற்றும் நம்பகமான தனியார் கல்வித் துறைக்கு பள்ளிக் கட்டணக் கட்டமைப்பு தொடர்ந்து ஆதரவளிப்பதை உறுதிசெய்ய பங்குதாரர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றியுள்ளதாகவும் தர்விஷ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!