ADVERTISEMENT

துபாய் காவல்துறையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ‘கியாத் ஸ்வாட்’ ரோந்து வாகனம்.. அப்படி என்ன ஸ்பெஷல்..!!

Published: 9 Mar 2023, 9:25 PM |
Updated: 10 Mar 2023, 8:24 AM |
Posted By: Menaka

துபாய் உலக வர்த்தக மையத்தில் மார்ச் 7 முதல் 9 வரை நடைபெறும் உலக போலீஸ் உச்சி மாநாட்டின் போது ரோந்து வாகனத்தின் சமீபத்திய மாடலான கியாத் ஸ்வாட் (Ghiath SWAT) வெர்ஷனை துபாய் காவல்துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ரோந்து வாகனத்தை துபாயை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் வாகன உற்பத்தி நிறுவனமான W மோட்டார்ஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து துபாய் காவல்துறையின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனெரல் அப்துல்லா கலீஃபா அல் மர்ரி அவர்கள் கூறுகையில், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதில் பங்களிக்கும் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களை காவல்துறைக்கு வழங்குவதன் மூலம், உலகளவில் காவல் துறைகளில் தலைமைத்துவத்தை அடைய நாங்கள் ஆர்வமாக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஸ்மார்ட் கியாத் ரோந்து வாகனம் சமீபத்திய தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளதாகவும், காவல்துறை நடவடிக்கைகளில் பாதுகாப்பு செயல்திறனை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். துபாய் காவல்துறையின் செயல்பாட்டு விவகாரங்களுக்கான உதவித் தளபதி (Assistant Commander-in-Chief for Operations Affairs at Dubai Police) மேஜர் ஜெனரல் அப்துல்லா அலி அல் கைதி அவர்கள் கூறுகையில், கியாத் ரோந்து வாகனத்தின் புதிய பதிப்பான “ஸ்வாட்” துபாய் காவல்துறையில் இணைந்ததில் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அதேசமயம், எந்தவொரு பாதுகாப்பு நிகழ்வையும் அதிக வேகம் மற்றும் துல்லியத்துடன் திறம்படச் சமாளிக்க சமீபத்திய தொழில்நுட்பங்களுடன் அதன் பணியாளர்களை தயார் செய்வதற்கு மேம்பட்ட வாகனங்கள் உட்பட பொருத்தமான கருவிகளை வழங்குவதில் துபாய் காவல்துறை என்றும் அதிகம் கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுபோல, கடந்த ஆண்டு நடைபெற்ற உச்சி மாநாட்டின் போது கியாத் ஸ்மார்ட் ரோந்து வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அதன் தொடர்ச்சியாக புதிய ஸ்வாட் வாகனம் வந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த காரின் கரடு முரடான வடிவமைப்பு, பல நிலப்பரப்பு சூழல்களை சிரமமின்றி கையாளும் திறனுக்காக உயர் செயல்திறன் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பு மூலம் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதுமட்டுமின்றி இந்த வாகனத்தில் பல்வேறு சிறப்பம்சங்களும் வசதிகளும் உள்ளன. ஆயுதம் மற்றும் வெடிமருந்து சேமிப்பு அமைப்புகள், போலீஸ் உபகரணங்களுக்கான ஸ்டோரேஜ், கூட்டத்தை சிதறடிக்கும் புகை அமைப்பு மற்றும் இரவு நேரங்களில் கண்காணிப்பதற்கான இராணுவ தர அகச்சிவப்பு LED அமைப்புகளும் உள்ளது.

மேலும், சாலைகளில் செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்டை அடையாளம் காணும் திறன் கொண்ட ஒன்பது கண்காணிப்பு கேமராக்கள், முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம், கட்டுப்பாட்டு மையத்திற்கு உடனடி அழைப்பு, ஆண்ட்ராய்டு சாதனங்கள் மற்றும் நான்கு சார்ஜிங் பாயிண்டுகள் போன்ற வசதிகளும் இந்த புதிய ரோந்து வாகனத்தில் இணைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.