ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பல எமிரேட்டுகளில் பொதுப் போக்குவரத்துக் கட்டணம் உலகிலேயே மிக மலிவானவை என்று இ-காமர்ஸ் நிறுவனமான பிகோடி (Picodi) அறிவித்துள்ளது. பிகோடி வெளியிட்ட அறிக்கையின்படி, துபாயில் 7.5 திர்ஹம், ஷார்ஜாவில் 6 திர்ஹம், ராஸ் அல் கைமாவில் 5 திர்ஹம், அஜ்மானில் 3 திர்ஹம் மற்றும் அபுதாபியில் 2.2 திர்ஹம்களுக்கும் பொதுப் போக்குவரத்து டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படுகின்றன.
இவற்றை லண்டன் (Dh19), பெர்லின் (Dh11.8), மெல்போர்ன்(Dh11.6), நியூயார்க் (Dh10), டொரொண்டோ (Dh8.7) மற்றும் பாரிஸ்(Dh8.25) போன்ற முக்கிய நகரங்களுடன் ஒப்பிடும் போது, அமீரகத்தின் எமிரேட்டுகளில் கட்டணங்கள் மிகவும் மலிவானவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிகோடி வெளியிட்டுள்ள ஆய்வின்படி, துபாயில் மாதாந்திர பொது போக்குவரத்து பாஸின் விலை $95 (Dh350) ஆகும், இது எமிரேட்டில் சராசரி மாத ஊதியத்தில் 2.3 சதவீதம் மட்டுமே. ஆனால், சாவ் பாலோ, இஸ்தான்புல், லண்டன், டொராண்டோ, பாரிஸ், மெல்போர்ன், ஜோகன்னஸ்பர்க், மாஸ்கோ மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் மக்கள் துபாயில் வசிப்பவர்களை விட மாதாந்திர பாஸில் அதிகம் செலவிடுவதாக தெரிகிறது.
இந்த ஆய்வில் சேர்க்கப்பட்டுள்ள மாதாந்திர பாஸ்கள், நகர எல்லைக்குள் அனைத்து போக்குவரத்து வழிகளிலும் வரம்பற்ற பயணத்தை அனுமதித்துள்ளன. மேலும், பல ஆபரேட்டர்களுடனும் மிகவும் மாறுபட்ட விலைக் கொள்கைகளுடனும் போக்குவரத்து முறையை வழங்கும் நகரங்கள் மற்றும் மாதாந்திர பாஸ் வழங்க முடியாத நகரங்கள் இந்த ஆய்வில் சேர்க்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
தங்களின் தினசரி பட்ஜெட்டில் கவனமாக இருக்கும் துபாயில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் அனைவரும் தனிப்பட்ட கார்களை விட பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த விரும்புவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, பணத்தை மிச்சப்படுத்துவதற்கான மிகவும் பிரபலமான போக்குவரத்து முறையான துபாய் மெட்ரோ பெருமளவில் குடியிருப்பாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக எமிரேட்டில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு பெரிய அளவில் அதிகரித்துள்ளது என கூறப்படுகின்றது.
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின்படி, மெட்ரோ, டிராம், பொதுப் பேருந்துகள், கடல்வழிப் போக்குவரத்து (அப்ரா, படகு, வாட்டர் டாக்ஸி, வாட்டர் பஸ்), இ-ஹெய்ல், ஸ்மார்ட் கார் வாடகை, பேருந்து மற்றும் டாக்ஸிகள் ஆகிய பொது போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை கடந்த 2022 ம் ஆண்டில் 621.4 மில்லியன்களாக பதிவாகியுள்ளது என்றும், இது 2021 இல் 461 மில்லியன் பயணிகள் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 35 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், துபாயில் வசிக்கும் குடியிருப்பாளர்களில் சிலர், தன்னிடம் சொந்தமாக கார் இருந்த போதிலும் அடிக்கடி பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தி பணத்தை மிச்சம் செய்வதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து தெரிவிக்கையில், பொது போக்குவரத்து சிக்கனமானது. அதேநேரம், காரை வெவ்வேறு பகுதிகளில் கட்டண பார்க்கிங்கில் நீண்ட நேரம் நிறுத்தி விட்டு நாளின் முடிவில் பார்க்கிங் கட்டணத்தை கணக்கிடும் போது, பொதுப் போக்குவரத்து மூலம் பணத்தை மிச்சம் செய்ய முடியும் என்று கூறியுள்ளனர்.
அத்துடன் மாதாந்திர கார் பராமரிப்பு, எரிபொருள் மற்றும் பார்க்கிங் செலவுகளை கணக்கில் எடுத்துக்கொண்டால், பொது போக்குவரத்து செலவில் சுமார் 20 சதவீதத்தை சேமிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.