அமீரக செய்திகள்

ரமலானை முன்னிட்டு களைகட்டும் சந்தை!! ஏராளமான பரிசுகள், ஆடைகள் மற்றும் உணவு டிரக்குகளுடன் துபாயில் துவங்கிய ரமலான் சூக்…

உலக இஸ்லாமியர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரமலான் எனும் புனித மாதத்தை வரவேற்கும் வகையில், மார்ச் 5 ஆம் தேதி, துபாயின் தேரா பகுதியில் உள்ள பழைய முனிசிபாலிட்டி தெருவில் ரமலான் சூக் நிகழ்வைத் தொடங்குவதாக துபாய் முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது.

இந்நிகழ்ச்சியானது, மார்ச் 5 முதல் மார்ச் 15 வரை ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. மேலும், இது பாரம்பரிய சந்தைகள் மற்றும் தயாரிப்புகளை ஊக்குவிப்பதுடன் சந்தைகளுக்கு முதலீட்டாளர்களை ஈர்க்கும் அதே வேளையில், ரமலான் ஏற்பாடுகளின் தனித்துவமான மரபுகள், பாரம்பரியம் மற்றும் பழக்கவழக்கங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதற்கிடையில், துபாயில் உள்ள பழமையான சந்தைகளில் ஒன்றான Grand Souq Deira போன்ற சந்தைகளில், ஏராளமான குடும்பங்கள் தங்கள் வீடுகளுக்கான பொருட்களை வாங்குவதற்கும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பாரம்பரிய ஆடைகள், தங்கம், பழம்பொருட்கள், தலையணைகள், பாத்திரங்கள் உட்பட அவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்காகவும் ஏராளமான பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், வாசனை திரவியங்கள், மசாலாப் பொருட்கள் போன்ற உணவுப் பொருட்களும் சந்தைகளில் குவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து துபாய் முனிசிபாலிட்டியின் கட்டடக்கலை பாரம்பரியத் துறையின் இயக்குநர் மன்சூர் அப்துல்நூர் அல் ரைஸ் அவர்கள் கூறுகையில், புனித ரமலான் மாதத்திற்கான பாரம்பரியம், மரபுகள், நம்பகத்தன்மை மற்றும் பழக்கவழக்கங்களை வெளிப்படுத்தும் பொழுதுபோக்கு நிகழ்வான ரமலான் சூக்கைத் தொடங்குவதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த 10 நாட்களிலும் குடிமக்கள், குடியிருப்பாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு வகையான பரிசுகள், ஆடைகள் மற்றும் உணவுப் பொருட்களைப் பார்வையிட மற்றும் தனித்துவமான ஷாப்பிங் அனுபவங்களைப் பெறுவதற்கு அனைவரையும் வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, பாரம்பரிய சூக் நிகழ்விற்கு கூடுதலாக மினி சூக் இடம்பெறும் என்றும் இது சுமார் 20 கியோஸ்க்களைக் (kiosks) கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பழைய முனிசிபாலிட்டி ஸ்ட்ரீட்டில் உள்ள கடைகளுக்கு சுமார் 15 கியோஸ்க்களும், உள்ளூர் எமிராட்டி முயற்சிகளுக்கு ஆதரவாக ஐந்து ஸ்டால்களும் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, பல பொது மற்றும் பொழுதுபோக்கு சேவைகள், உள்ளூர் மற்றும் பாரம்பரிய உணவு வகைகளை வழங்கும் உணவு டிரக்குகள், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை குழந்தைகளுக்கான நேரடி நிகழ்வுகள் ஆகியவையும் இதில் அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!