அமீரக செய்திகள்

அமீரகத்தில் வேலையின்றி, பணமின்றி பசியில் இருப்பவர்களுக்கு இலவசமாக உணவுகளை வழங்கும் ஏழு உணவகங்கள்!!

பிறர் துயர் உணர்ந்து உதவிக்கரம் நீட்டும் தொண்டு மனப்பான்மை ஐக்கிய அரபு அமீரகத்தின் கலாச்சாரம் மற்றும் சமூகத்தில் வேரூன்றி உள்ளது. அதிலும் நாட்டில் பசி வயிற்றோடு உள்ளவர்களின் உள்ளம் நிறைய, அமீரகத்தில் உள்ள சில உணவகங்களில் ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் அமீரகத்தின் பில்லியன் உணவு என்ற முயற்சியின் கீழ், சுமார் 600 மில்லியன் உணவுகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சில ஆசிய மற்றும் அரேபிய உணவகங்கள், புளூ காலர் தொழிலாளர்கள், விசிட் விசாவில் வந்தவர்கள், காலாவதியான விசா உடையவர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இலவசமாக உணவுகளை வழங்கி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த உணவகங்களில் முக்கியமாக அரபு, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய உணவு வகைகள் வழங்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமீரகத்தில் இலவசமாக உணவு வழங்கும் உணவகங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Foul W Hummus:

பசியில் தவிக்கும் மக்களுக்கு வயிறார உணவளிக்க வேண்டும் என்பதற்காக அரேபிய உணவகம் இலவசமாக உணவுகளை வழங்கி வருவதாகத் தகவல்கள் கூறியுள்ளன. எனவே, மக்கள் உணவகத்தின் மெனுவில் இருந்து ஃபலாஃபெல் (falafel), மௌடபால் (moutabal), ஹம்முஸ் கொண்ட பைன் நட்ஸ் (hummus with pine nuts), சாண்ட்விச்கள் (sandwiches) மற்றும் பலவற்றை தேர்வு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fatta Kawareh:

எகிப்திய உணவகமான ஃபத்தா கவாரே அபு ஹெயிலில் அமைந்துள்ளது. இங்கு தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக உணவு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உணவகத்தின் மேலாளரான அதியா யூசப் என்பவர் கூறுகையில், சென்ற ஆண்டு புனித ரமலான் மாதத்தில் உணவு வாங்க முடியாமல் தவித்த மக்கள் உணவகத்திற்குள் நுழைந்ததைக் கவனித்த போது இந்த முயற்சி தொடங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Yummy Dosa:

இது ஒரு இந்திய உணவகமாகும். இரத்த தானம் செய்பவர்களை ஊக்குவிக்க அவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கத் தொடங்கி தற்போது, பணம் இல்லாதவர்களுக்கும் இங்கு இலவசமாக உணவு வழங்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், யம்மி தோசாவின் நிர்வாக இயக்குநரான ஜுகல் பரேக் என்பவர் கூறுகையில், இரத்த தானம் செய்பவர்களுக்கு எப்போதும் கட்டணமின்றி உணவளிக்கப்படும் என்றும், எனவே இரத்த தானம் பெற்றவர்கள் துபாய் மற்றும் ஷார்ஜாவில் உள்ள மூன்று உணவகங்களில் ஏதேனும் ஒன்றில் உணவுகளை கட்டணம் செலுத்தாமல் சாப்பிடலாம் என்று தெரிவித்துள்ளார்.

Karachi Star:

பலரது பசியாற்றி தொண்டு செய்யும் இந்த உணவகத்தில் பெரும்பாலும் பாகிஸ்தான் மற்றும் இந்திய உணவுகளே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல, நாட்டிற்குள் பணமின்றி விசிட் விசாவில் உள்ள ஏழைகள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், வேலையின்றி சிரமப்படுபவர்கள் அல்லது காலவதியான விசா வைத்திருப்பவர்கள் ஷார்ஜாவின் முவைலா மற்றும் சாஜாவில் உள்ள கராச்சி ஸ்டாரின் கிளை உணவகங்களுக்கு வரலாம் என்றும், அவர்களுக்கு கட்டணமின்றி உணவு வழங்கப்படும் என்றும் கராச்சி ஸ்டார் உரிமையாளர் ஷாஹித் அஸ்கர் பங்காஷ்கூறியுள்ளார். அவரது கூற்றுப்படி, உணவு தேவைப்படுபவர்களுக்கு அவர்கள் வேறு எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அதனை பொருட்படுத்தாமல் உணவு வழங்கப்படுவது தெரிய வந்துள்ளது.

Shinwari Tikka:

பசி என்று நாடும் மக்களுக்கு கட்டணமின்றி உணவளிக்கும் இந்த உணவகம் டெய்ராவில் அமைந்துள்ளது. இது குறித்து உணவக உரிமையாளரான கைர் அல் அமீன் என்பவர் கூறியதாவது, சராசரியாக நாளொன்றுக்கு நான்கு பேர் இலவசமாக உணவு உண்கிறார்கள், சில நேரங்களில் இன்னும் அதிகமாக இலவச உணவைக் கோருகிறார்கள் என்றார்.

Khair Darbar:

இலவச உணவை நாடி வரும் ஏழைகள் மற்றும் நீல காலர் தொழிலாளர்களுக்கு கட்டணமின்றி உணவு வழங்கும் இந்த உணவகம் அல் குவோஸில் அமைந்துள்ளது.

Pak Khair Darbar:

பாகிஸ்தானிய மற்றும் இந்திய உணவு வகைகளை வழங்கும் இந்த உணவகம் டெய்ரா துபாயில் அமைந்துள்ளது. அத்துடன் கேட்கும் மக்களுக்கு கட்டணம் வசூலிக்காமல் உணவு வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!