அமீரக செய்திகள்

ரமலான் மாதத்தில் வேலை நேரத்தை நீட்டிக்க சிறப்பு அனுமதி தேவை..!! ஷார்ஜா முனிசிபாலிட்டி அறிவிப்பு…!!

இன்னும் ஒரு சில நாட்களில் வரவிருக்கும் ரமலான் மாதத்தை முன்னிட்டு இந்த ரமலான் மாதத்தில் வேலை நேரத்தை நீட்டிக்க விரும்பும் வணிகங்களுக்கு சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்று ஷார்ஜா முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது. அதன்படி, இந்த மாதத்தில் நள்ளிரவுக்குப் பிறகு செயல்பட விரும்பும் கடைகள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் இந்த அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனை, https://www.shjmun.gov.ae/ என்ற லிங்க் மூலம் ஆன்லைனில் அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நள்ளிரவுக்குப் பின்னர் வேலை செய்ய பொறியியல் ஒப்பந்ததாரர்கள் இந்த அனுமதியைப் பெற அனுமதிக்கப்படுவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு சில வணகங்கள் இந்த அனுமதியின்றி செயல்பட முடியும் என்று கூறப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஷார்ஜா முனிசிபாலிட்டி இந்த அனுமதி தேவையில்லாத வணிகங்களை பட்டியலிட்டுள்ளது.

இதன்மூலம், ஷார்ஜாவில் உள்ள உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் கஃபேக்கள் போன்றவை அனுமதியின்றி வேலை நேரத்தை நள்ளிரவுக்கு மேல் நீட்டிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில், உணவகங்களுக்கு இரண்டு அனுமதிகள் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

அதில் ஒன்று, பகலில் உணவு தயாரிப்பதற்கான காட்சிகளையோ அல்லது ஷாப்பிங் சென்டர்கள் உட்பட உணவகங்களில் உணவுகளை காட்சிப்படுத்துவது போன்றவற்றிற்கோ அனுமதிக் கட்டணமாக 3,000 திர்ஹம்கள் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக நோன்பு திறக்கக்கூடிய நேரமான இஃப்தார் நிகழ்வுக்கு முன், உணவகங்களின் முன்புறம் சிற்றுண்டிகளை காட்சிப்படுத்துவதாகும். இந்த அனுமதிக்கான கட்டணம் 500 திர்ஹம்கள் ஆகும் என கூறப்பட்டுள்ளது.

உணவக உரிமையாளர்கள் அல்லது மேலாளர்கள், ஷார்ஜா முனிசிபாலிட்டியின் புறநகர் விவகாரத் துறை, தொழில்துறை பகுதி 5 இல் உள்ள உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு கவுண்டரில் இந்த அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நோன்பு கடைபிடிக்கும் இஸ்லாமியர்களுக்காக புனித மாதத்தில் உணவுகளை காட்சிப்படுத்துவதற்கான பொதுவான வழிகாட்டுதல்களையும் முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!