அமீரக செய்திகள்

UAE: போக்குவரத்து அபராதத்தில் 50% தள்ளுபடியை அறிவித்துள்ள எமிரேட்..!! யாருக்கெல்லாம் தள்ளுபடி பொருந்தாது..??

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா எமிரேட்டில், அனைத்து போக்குவரத்து அபராதங்களிலும் 50 சதவீத தள்ளுபடி வழங்குவதாக ஷார்ஜா காவல்துறை அறிவித்துள்ளது. ஷார்ஜா காவல்துறை வெளியிட்டுள்ள தகவல்களின் படி, வாகன ஓட்டிகள் மீது செலுத்த வேண்டிய போக்குவரத்து விதிமீறல்களின் சுமையை குறைக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட 50 சதவீத தள்ளுபடியானது மார்ச் 1 முதல் 31 வரை வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

அத்துடன், வாகனங்கள் பறிமுதல் மற்றும் பிளாக் பாயிண்டுகளும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து தள்ளுபடிகளும் கடந்த ஆண்டுகளில் நடந்த போக்குவரத்து விதிமீறல்களுக்கும் பொருந்தும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. எனினும், கடுமையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு தள்ளுபடி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதாவது, சாலைகளில் அலட்சியமாக வாகனம் ஓட்டுதல், பிறர் உயிருக்கு ஆபத்தை விளைவித்தல், ரேடார் அமைப்பில் பிடிபட்ட வாகனம், சிவப்பு சிக்னலைத் தாண்டிச் செல்லுதல் மற்றும் பிற கடுமையான 10 விதிமீறல்களுக்கு இந்த தள்ளுபடி திட்டம் பொருந்தாது என்று லெப்டினன்ட் கர்னல் அல் நக்பி என்பவர் கூறியுள்ளார். எனவே, வாகன ஓட்டிகள் விதிமீறல்களைக் குறைக்கவும், அபராதச் சுமைகளைத் தீர்த்துக் கொள்ளவும் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கு முன்னதாக ஷார்ஜா நிர்வாகக் குழு போக்குவரத்து அபராதங்களில் புதிதாக 35% வரை தள்ளுபடி வழங்கும் திட்டம் ஒன்றை அறிவித்திருந்தது. இந்த புதிய 35% அபராத தள்ளுபடி திட்டமானது எதிர்வரும் ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஷார்ஜா காவல்துறையின் கமாண்டர்-இன்-சீஃப் மேஜர் ஜெனரல் சைஃப் சிரி அல் ஷம்சி என்பவர் இந்த திட்டம் குறித்து கூறுகையில், போக்குவரத்து விதிமீறல் செய்யப்பட்ட தேதியில் இருந்து அடுத்த அறுபது நாட்களுக்குள் அபராதம் செலுத்தி விட்டால் அபராதத்தில் 35% தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், வாகனம் பறிமுதல் செய்வதில் இருந்தும் விலக்கு அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதேசமயம், விதிமீறல் புரிந்த நாளில் இருந்து 60 நாட்களுக்குப் பிறகு பணம் செலுத்தப்பட்டால், 25% தள்ளுபடி மட்டுமே பொருந்தும் என்றும் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாகன ஓட்டிகள் விதிமீறல் செய்து ஒரு வருடம் கடந்த பின்னரும் அபராதம் செலுத்தாவிடில், அபராதத்தை முழுமையாக செலுத்த வேண்டும் என்றும் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!