அமீரக செய்திகள்

UAE: பயணிகளுக்கு விரைவான மற்றும் சுமூகமான பயணத்தை வழங்க பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவுள்ள ஷார்ஜா விமான நிலையம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான நிலையங்கள் தங்கள் கட்டமைப்புகளைப் புதுப்பிப்பதற்கும், பயணிகளுக்கு பயணத்தை மென்மையானதாகவும், தடையற்றதாகவும், தொடுதலற்றதாகவும் (touchless) மாற்றும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த பெரிய முதலீடுகளைச் செய்து வருகின்ற நிலையில், ஷார்ஜா விமான நிலையமும், இந்த பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தை செயலாக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது ஷார்ஜா விமான நிலையத்தில் இதற்கான இறுதிக் கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. ஆகவே, இதன் மூலம் பயணிகளின் முகத்தை அடையாளம் காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோலவே, கடந்த நவம்பர் 2022 இல், அபுதாபி விமான நிலையங்கள் பயணிகளின் முக அடையாளத்தை பாஸ்போர்ட்டாகப் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக அறிவித்திருந்தது. மேலும், இதன் முதல் கட்டத்தில் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CBP) வசதியில் இது சோதனை செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய தொழில்நுட்பம் குறித்து ஷார்ஜா விமான நிலைய ஆணையத்தின் இயக்குனர் ஷேக் பைசல் பின் சவுத் அல் காசிமி அவர்கள் கூறுகையில், இதுவரை 50 சதவீத முக அங்கீகார திட்டத்தை நிறைவு செய்துள்ளதாகவும் மேலும், இது இமிகிரேஷன் மற்றும் விமான அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பதற்கான இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் முக அங்கீகாரத்தை 2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும், தொற்றுநோய்க்குப் பிறகு ஷார்ஜா விமான நிலையமும் விமானப் போக்குவரத்துத் துறையும் எதிர்பார்த்ததை விட வேகமாக மீட்சி அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, தொற்று பரவலின் போது, விமானப் போக்குவரத்து மீண்டு வர ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்த்ததாகவும், ஆனால், 2022 ஆம் ஆண்டில் 13 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் போக்குவரத்தை அடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஷார்ஜாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஏர் அரேபியா தனது புதிய வழித்தடங்களை விரிவுபடுத்தும் என்றும் இது இந்த ஆண்டு எமிரேட் விமான நிலையத்தின் வளர்ச்சியை அதிகரிக்கும் என்றும் ஷேக் பைசல் கூறியுள்ளார். அதேசமயம், ஷார்ஜா இந்த ஆண்டு ஐந்து பயணிகள் விமான நிறுவனங்களையும் அதே எண்ணிக்கையிலான சரக்கு விமானங்களையும் ஈர்க்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

வெளியான தகவல்களின்படி, ஷார்ஜா விமான நிலையத்தில் 2019 ஆம் ஆண்டில் அதாவது தொற்றுநோய்க்கு முந்தைய காலகட்டத்தில் 13.6 மில்லியன் பயணிகள் போக்குவரத்து பதிவாகியுள்ளது. அதன்பிறகு, 2022 ஆம் ஆண்டில் 13 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை பெற்று 84.73 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், விமானங்களின் இயக்கமும் 2021 இன் இறுதியில் 57,679 உடன் ஒப்பிடும்போது 51.69 சதவிகிதம் அதிகரித்து 87,4952 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், ஷார்ஜா விமான நிலைய ஆணையத்தின் தலைவர் அலி சலிம் அல் மிட்ஃபா அவர்கள் கூறுகையில், இந்த ஆண்டு கடைசிக்குள் பயணிகளின் போக்குவரத்தில் மேலும் ஐந்து சதவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் 2023 ஐ ‘Year of Sustainability’ ஆண்டாக தெரிவிக்கும் அமீரகத்தின் அறிவிப்புக்கு கடமைப்பட்டுள்ளதாகவும், அனைத்து மூலோபாய பங்காளிகளுடனும் வலுவான ஒத்துழைப்பை எதிர்நோக்குவதாகவும் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!