ADVERTISEMENT

UAE: நீங்கள் வாங்கும் பொருட்களுக்கான பில்லை பத்திரமாக வைத்திருங்கள்.. குடியிருப்பாளர்களுக்கு பொருளாதார அமைச்சகம் அறிவுறுத்தல்..!!

Published: 25 Mar 2023, 7:17 AM |
Updated: 25 Mar 2023, 8:12 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சகம் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த ஃபெடரல் சட்டத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தில் நுகர்வோர் உரிமைகளை மீறும் விற்பனையாளர்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் குறிப்பிட்ட அபராதங்கள் உட்பட பல விவரங்கள் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

அதாவது, உரிமை மீறல் எனும் போது, வாங்கிய பொருளில் குறைபாடு இருக்கின்ற நிலையில் விற்பனையாளரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்றால், வாடிக்கையாளர் எந்தத் தண்டனையைக் கோரலாம் அல்லது அதிகாரிகளிடம் எவ்வாறு புகார் அளிக்கலாம் போன்ற விவரங்கள் நுகர்வோர் உரிமைகளுக்கான புதுப்பிக்கப்படும் சட்டத்தில் அடங்கும் என்று கண்காணிப்பு உதவி துணைச் செயலர் அப்துல்லா சுல்தான் அல் ஃபேன் அல் ஷம்சி கூறியுள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டு அமைச்சகம் நடத்திய 94,123 சோதனையில் 4,227 விதிமீறல்களும், நடப்பு ஆண்டின் முதல் சில மாதங்களில் நடத்தப்பட்ட 8,170 சோதனைகளில் 1,030 மீறல்களும் பதிவாகியுள்ளன. கூடுதலாக, இந்த சோதனையின் மூலம், வாடிக்கையாளர்களுக்கு விலைக் குறிப்புகள் (price tags) காட்டப்படுவதையும், தரமான தயாரிப்புகள் வழங்கப்படுவதையும் உறுதிபடுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இன்றைய காலகட்டத்தில் நுகர்வோர் மிகவும் புத்திசாலிகள் என்றும், மீறல்கள் குறித்து அமைச்சகத்திடம் புகார் செய்வதால் அவர்களது உரிமைகளைப் பாதுகாக்க உதவுவதாகவும் கூறிய அல் ஷம்சி, உரிமை மீறல்களைக் கண்காணிப்பது வாடிக்கையாளர்களிடமிருந்து தொடங்குகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பொருட்களின் விலையை உயர்த்துமாறு சில்லறை விற்பனையாளர்களின் சமீபத்திய கோரிக்கைகள் பற்றி பேசுகையில், விலை உயர்வை சரிபார்க்கவும், நியாயப்படுத்தவும் வெளிப்புற சிறப்பு தணிக்கை அமைப்புகளை அமைச்சகம் நியமித்துள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் அமைச்சகம் நாட்டில் சிறந்த வர்த்தக நடைமுறைகளை ஊக்குவிப்பதுடன், விற்பனையாளர்களால் நியாயமற்ற விலை உயர்வுகள் கோரப்படவில்லை என்பதையும் அமைச்சகம் உறுதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த ஆண்டு ரமலான் மாதத்தில் அரிசி, மாவு, சர்க்கரை, இறைச்சி, கோழி, மீன், பால் பொருட்கள், பழச்சாறுகள் போன்ற பிற அடிப்படை பொருட்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளதா என்பதை உறுதி செய்ய விநியோகஸ்தர்களுடன் 26 கூட்டங்களை பொருளாதார அமைச்சகம் நடத்தியுள்ளது.

அமைச்சகம் வெளியுட்டுள்ள தகவல்களின்படி, துபாயில் பழங்கள் மற்றும் காய்கறிகளின் தினசரி நுகர்வு 19,000 டன்களை எட்டியுள்ளது, அபுதாபியில் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதியின் அளவு கிட்டத்தட்ட 6,000 டன்களை எட்டியுள்ளது. அத்துடன் சுமார் 143,000 டன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நாட்டில் இருப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமெனில், முதலில் வாடிக்கையாளர்கள் அவர்கள் வாங்கும் பொருட்களின் விலைப்பட்டியலை வைத்திருக்க வேண்டும் என்றும், அவர்களின் உரிமைகளை மீறும் ஏதேனும் குறைகள் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளுக்கு உத்தரவாதமாக அந்த விலைப்பட்டியலை சமர்ப்பிக்க முடியும் என்றும் குடியிருப்பாளர்களுக்கு அமைச்சகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.