அமீரக செய்திகள்

UAE: நான்கு நாட்கள் ஈத் விடுமுறை.. விசா இல்லாமல் சுற்றி பார்க்கக்கூடிய நாடுகள்..!! பல்வேறு சலுகைகளை வழங்கும் டிராவல் நிறுவனங்கள்..!!

அமீரகத்தில் இந்த வருடம் ஈத் அல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாளானது வரும் ஏப்ரல் 21 ம் தேதியாக இருக்கும் என வானியலாளர்கள் கணித்துள்ளனர். இதனையொட்டி அமீரகத்தில் வரும் ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 24 திங்கள் வரை ஈத் அல் ஃபித்ருக்கான விடுமுறையாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. அமீரகத்தில் வரவிருக்கும் இந்த நீண்ட நாள் விடுமுறையின் போது அமீரகத்தில் வசிக்கும் பெரும்பாலான குடியிருப்பாளர்கள் விசா இல்லாமல் பயணிக்கக்கூடிய நாடுகளுக்கு சுற்றுலா செல்ல பெரிதும் விரும்புகின்றனர்.

எனவே, ஏராளமான டிராவல் ஏஜென்சிகளும் விமான நிறுவனங்களும் ஏற்கனவே இந்த மாதத்திற்கான சராசரியை விட அதிகமான டிக்கெட் முன்பதிவுகளை செயல்படுத்தியதுடன் டிக்கெட் கட்டணங்களில் சிறப்பான தள்ளுபடிகளை அறிவித்து பயணிகள் இது போன்ற சுற்றுலா பயணம் மேற்கொள்ள ஊக்குவித்துள்ளன.

உதாரணமாக, Flydubai நிறுவனத்தின் ஈத் ஹாலிடே பேக்கேஜ் Yerevan நகருக்கு மூன்று இரவுகள் தங்குவதற்கு 3,500 திர்ஹம்கள் என்று அறிவித்துள்ளது. இதில் எகானமி வகுப்பு டிக்கெட்டுகள் மற்றும் விடுதியில் தங்குவதற்கான செலவுகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதுபோலவே, அஜர்பைஜான் மற்றும் தாய்லாந்துக்கான சுற்றுலா பேக்கேஜ்கள் 3,150 திர்ஹம்கள் செலவில் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாகவே அமீரக குடியிருப்பாளர்களின் சுற்றுலா விருப்பங்களில் விசா இல்லாத அல்லது விசா-ஆன்-அரைவல் இடங்களுக்கான பேக்கேஜ்களில் பெரும்பாலும் ஜார்ஜியா, அர்மீனியா, அஜர்பைஜான், இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மலேசியா போன்ற பிரபலமான இடங்கள் முன்னிலை வகிக்கின்றன. டிராவல் ஏஜென்டுகளின் கூற்றுப்படி, பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவுகள் சென்ற ஆண்டை விட 30 முதல் 40 சதவீதம் அதிகம் என்றாலும் விலைகளில் மாற்றம் ஏதுமில்லாமல் அப்படியே இருப்பது தெரிய வந்துள்ளது.

அதேவேளை, எதிர்வரும் வாரங்களில் விமான டிக்கெட்டுகளின் கட்டணங்கள் கிடுகிடுவென உயரும் என எதிர்பார்க்கப்படுவதால், குடியிருப்பாளர்கள், குறிப்பாக பயணத் திட்டத்தை உறுதி செய்தவர்கள் முடிந்த வரையில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வைக்குமாறு டிராவல் ஏஜென்டுகள் பரிந்துரைத்துள்ளனர்.

இது குறித்து ஈக்குவேட்டர் டிராவல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சுரேந்திரநாத் மேனன் அவர்கள் கூறுகையில், தூர கிழக்கு பகுதிகளில் (Far East sectors) உள்ள நாடுகளில் டிக்கெட் முன்பதிவு போக்கு பெருமளவில் காணப்படுவதாகவும், பாலி, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் போன்ற சுற்றுலா இடங்கள் அமீரகம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதனால்தான், கிழக்கு ஐரோப்பிய டிராவல் பேக்கேஜ்கள் மிகவும் மலிவு விலையில் உள்ளதாகக் கூறப்படுகின்றது. அதற்கு சான்றாக, ஜார்ஜியாவிற்கான ஈத் பேக்கேஜ்கள் 3,300 திர்ஹம்கள் ஆகும், எனினும் தேவைப்பட்டால், குழு கட்டணம் ஒரு நபருக்கு 2,800 முதல் 3,000 திர்ஹம் வரை வசூலிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஐரோப்பாவின் ஷெங்கன் நாடுகளுக்கு பயணிக்க விரும்புவோர், விசா விண்ணப்ப நிராகரிப்பு மற்றும் தாமதமான செயலாக்கம் போன்றவற்றைத் தவிர்க்க முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும் என்று மேனன் தெரிவித்துள்ளார். ஏனெனில், ஷெங்கன் விசா நியமனத்திற்கு நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதால் பயணத் தேதிக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே ஷெங்கன் நாடுகள் ஆவணங்களை ஏற்றுக்கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

https://booking.com/ என்ற பயண முன்பதிவு இணையதளம் நடத்திய ஆய்வின் படி, பயணிகள் குறைவான கட்டணத்தில் சிறந்த பேக்கேஜ்களைத் தேடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது 53 சதவீத மக்கள் கடந்த ஆண்டுகளை விட பயணங்களுக்கான செலவுகளில் சிக்கனமாக இருக்க திட்டமிட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

உலகளாவிய பயண சந்தையான Skyscanner Travel Expert Ayoub El Mamoun இன் கூற்றுப்படி, 38 சதவீத பயணிகள் சவூதிக்கு பயணம் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளனர் என்றும், அதே நேரத்தில் 92 சதவீத பயணிகள் சவுதிக்கு பயணம் செய்ய முயற்சிப்பதும் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில், பல்வேறு பயண நிறுவனங்கள் அமீரக குடியிருப்பாளர்கள் சிறப்பு கட்டண சலுகைகளுடன் தங்கள் பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளன. உதாரணமாக, அஜர்பைஜானின் தலைநகரான பாகுவிற்கு 2,899 திர்ஹம்கள் செலவிலான பேக்கேஜ்களை டிராவல் ஏஜென்சிகள் வழங்கியுள்ளன. மேலும், 2,799 திர்ஹம்களுக்கு Tsiblisi, Georgia போன்ற இடங்களுக்கு பேக்கேஜ்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் இஸ்ரேலுக்கு 5,799 திர்ஹம்கள் செலவிலும், அஜர்பைஜான் மற்றும் பட்டாயா பகுதிகளுக்கு 3150 திர்ஹம்களிலும் Zanzibar-க்கு 3,999 திர்ஹம்களிலும் பேக்கேஜ்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!