அமீரக செய்திகள்

400 திர்ஹம்களுக்கும் குறைவான கட்டணத்தில் அமீரகத்தில் இருந்து சவூதிக்கு பயணிக்கலாம்..!! வழிமுறைகள் என்ன..??

அமீரகத்தில் இருந்து விமானத்தில் பயணம் செய்வது அல்லது சவூதி அரேபியாவுக்கு மலிவான கட்டணத்தில் பயணம் செய்ய நினைப்பவர்களாக இருந்தால், அதற்குப்பதிலாக சவூதியின் தம்மாம் அல்லது ரியாத்துக்கு 400 திர்ஹம்களுக்கும் குறைவான கட்டணத்தில் பேருந்தில் பயணிக்க முடியும் என்று சொன்னால் உங்களால்  நம்ப முடிகிறதா? ஆம் என்பதே உண்மை. ஏனெனில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய எமிரேட்டுகளில் இருந்து சவூதி அரேபியா பொது போக்குவரத்து நிறுவனத்தால் (Saudi Arabia Public Transportation Company – SAPTCO) இயக்கப்படும் பேருந்துகளில் மலிவான கட்டணத்தில் பயணம் செய்ய முடியும் என்பது தெரியவந்துள்ளது.

SAPTCO என்பது சவூதியின் முக்கிய நகரங்களான ரியாத், தம்மாம், ஜித்தா, மக்கா மற்றும் மதீனாவில் பொதுப் போக்குவரத்து சேவைகளை இயக்கும் பொது நிறுவனம் ஆகும். SAPTCO இணையதளத்தின்படி, அமீரகத்தில் உள்ள அதிகாரப்பூர்வ SAPTCO டிக்கெட் ஏஜென்ட் பெலாட் அல் ஷாம் (Belad Al Sham Passenger Transport) நிறுவனம் ஆகும். இது தம்மாம் மற்றும் ரியாத் நகரங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு தினசரி பயணங்களை ஏற்பாடு செய்து தருகிறது. மேலும், அதன் மேலாளர் அப்துல்ரஹ்மான் தவ்ஃபிக் அகில் என்பவரின் கூற்றுப்படி அமீரகத்தில் இருந்து சவூதிக்கு பயணிக்க ஆகும் செலவு குறித்த விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ரியாத் :

  • ஒருவழிப் பயணம் – 250 திர்ஹம்
  • இருவழிப் பயணம் – 380 திர்ஹம்

தம்மாம்:

  • ஒருவழிப் பயணம் – 220 திர்ஹம்
  • இருவழிப் பயணம் – 325 திர்ஹம் என்ற கட்டண முறையில் வசூலிக்கப்படுவது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி இரண்டு வயது குழந்தைகள் இலவசமாகவும், இரண்டு வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் பேருந்து டிக்கெட்டில் 30 சதவீத தள்ளுபடியைப் பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவுக்கு பேருந்து டிக்கெட்டுகளை எவ்வாறு பெறுவது?:

— பயணிகள் இரண்டு வழிகளில் டிக்கெட்டுகளை வாங்க முடியும். முதலாவதாக https://www.saptco.com.sa/TripReservation/Search.aspx என்ற SAPTCO இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகவும், இரண்டாவதாக தேரா, துபாய் மற்றும் அல் ஷஹாமா, அபுதாபியில் அமைந்துள்ள பெலாட் அல் ஷாம் பயணிகள் போக்குவரத்து அலுவலகம் மூலமும் டிக்கெட்டுகளை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

— அதேசமயம், டிக்கெட் அலுவலகம் சனிக்கிழமை முதல் வியாழன் வரை காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்றும் வெள்ளிக்கிழமை, அலுவலக நேரம் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை என்பதால் பயணிகள் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

— நீங்கள் நேரடியாக அலுவலகத்திற்குச் சென்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்பட்சத்தில் கிரெடிட் கார்டு அல்லது நேரடி பணமாக கட்டணத்தைச் செலுத்தலாம் அல்லது நீங்கள் SAPTCO இணையதளம் மூலம் டிக்கெட்டை முன்பதிவு செய்தால், உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டும்.

துபாயில் இருந்து தம்மாம் மற்றும் ரியாத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் படிகள்:

— முதலில் https://www.saptco.com.sa/TripReservation/Search.aspx என்ற லிங்க்கை கிளிக் செய்து பின் இது ஒரு வழிப் பயணம், சுற்றுப் பயணம் அல்லது பல இலக்கு பயணமா என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் வருகை (Arrival) மற்றும் புறப்படும் நகரத்தை (தேபர்டுரே city) உள்ளிட வேண்டும்.

— பின்னர், பயணத் தேதி மற்றும் பயணிகளின் எண்ணிக்கை போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும். அதன் பிறகு ‘Search’ பட்டனை கிளிக் செய்து நீங்கள் உள்ளிட்ட தேதியில் பேருந்து உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.

— பின்பு, திரையில் தோன்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்பதாக கிளிக் செய்தால், பயண நேரம், டிக்கெட் விலை மற்றும் பயணத்தின் கால அளவை உங்களுக்கு காண்பிக்கும். அத்துடன் ‘Book’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

— அடுத்தபடியாக, பயணிகளின் விவரங்களை (பெயர், தேசியம், பாலினம், பிறந்த தேதி, மொபைல் எண்) உள்ளிட வேண்டும். குறிப்பாக, ஆவண வகையை பாஸ்போர்ட், தேசிய ஐடி, இகாமா அல்லது ரெசிடென்ஸ் விசா. நீங்கள் GCC அல்லாத குடிமகனாக இருந்தால், உங்கள் பாஸ்போர்ட் எண்ணை உள்ளிட்டு ‘Continue’ பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

— இறுதியாக, டிக்கெட்டுகளை உறுதிசெய்து, உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தி பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியில் உறுதிப்படுத்தல் மற்றும் பேருந்து டிக்கெட்டுகளை பெறலாம்.

— அடுத்தபடியாக, டிக்கெட்டுகளை பிரிண்ட்அவுட் எடுத்து உங்கள் சவுதி விசா மற்றும் பாஸ்போர்ட் நகலுடன் வைத்துக்கொள்ள வேண்டும், பேருந்து சவூதி அரேபியாவின் எல்லையை அடைந்ததும், இமிகிலேஷன் அதிகாரிகளிடம் உங்களின் டிக்கெட்டுகள், சவுதி விசா மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். அதுபோல, பயணிகள் பேருந்தில் ஏறும்போது, ஆவணங்களின் பிரிண்ட் அவுட் மற்றும் பாஸ்போர்ட் குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரக குடியிருப்பாளர்கள்:

  1. எமிரேட்ஸ் ஐடி
  2. பாஸ்போர்ட்
  3. செல்லுபடியாகும் ரெசிடென்ஸ் அனுமதி
  4. GCC குடியிருப்பாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் eVisa-வின் நகல்
  5. பஸ் டிக்கெட்

சுற்றுலா பயணிகள்:

  1. சவூதி விசிட் விசா – 49 நாடுகளுக்கு மேல் உள்ள பார்வையாளர்கள் சவுதி இவிசாவிற்கு தகுதி பெற்றுள்ளனர், நீங்க தகுதியான நாடுகளைச் சேர்ந்தவராக இல்லாவிட்டால், அங்கீகரிக்கப்பட்ட பயண முகவரிடமிருந்தோ அல்லது உங்கள் நாட்டில் உள்ள சவுதி தூதரகத்தின் மூலமாகவோ சவுதி விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.
  2. செல்லுபடியாகும் UAE வருகை விசா, நீங்கள் UAE க்கு திரும்பும்போதும் இது தேவைப்படும்.
  3. பஸ் டிக்கெட்.

பேருந்து நேரங்கள்:

பேருந்து நேரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏதேனும் மாற்றங்கள் இருக்கும் நிலையில் அலுவலகம் உங்களுக்கு தெரிவிக்கும்.

  • துபாய் – தம்மாம் மதியம் 2 மணிக்கு (UAE நேரம்) புறப்படும்.
  • துபாய் – ரியாத் மதியம் 3 மணிக்கு (UAE நேரம்) புறப்படும்.

பஸ் பிக் அப் பாயிண்டுகள்:

பெலாட் அல் ஷாம் பயணிகள் போக்குவரத்தின் படி, SAPTCO பேருந்து அமீரகத்தில் மூன்று முக்கிய பேருந்து நிறுத்தங்களைக் கொண்டுள்ளது:

  1. துபாய்: பின் ரஷீத் கட்டிடம், அல் கலீஜ் சாலை, ஃப்ரிஜ் அல் முரார்
  2. ஷார்ஜா: கிங் பைசல் மசூதிக்குப் பின்னால்
  3. அபுதாபி: அல் நஹாத் ஸ்ட்ரீட், அல் ஷஹாமா

துபாய் மற்றும் ஷார்ஜாவிற்கான டிக்கெட் அலுவலகம் பேருந்து நிறுத்தங்களுக்கு அருகில் அமைந்துள்ளது.

லக்கேஜ் கட்டுப்பாடுகள்:

கிடைத்துள்ள தகவல்களின்படி, பயணிகள் அதிகபட்சமாக 50 கிலோ எடையுள்ள சாமான்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. இருப்பினும் லக்கேஜ் 50 கிலோவுக்கு மேல் இருந்தால், பயணிகளிடம் அதிகப்படியான சாமான்களுக்கு ஒரு கிலோவுக்கு 3 திர்ஹம் வீதம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அமீரகத்தில் இருந்து தம்மாம் மற்றும் ரியாத்த்துக்கு செல்ல ஆகும் நேரம்:

அமீரகத்தில் இருந்து சவூதிக்கு பயணம் செய்ய வழக்கமாக எட்டு முதல் 12 மணிநேரம் ஆகும், மேலும் பேருந்து எந்த நிறுத்தத்தையும் செய்யாது. அத்துடன் பேருந்து சவூதி எல்லையை அடைந்தவுடன், சுங்க அனுமதி பெறுவதில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகும் என்று அவர் கூறியுள்ளார். மேலும், அல் அஜிசியாவில் உள்ள SAPTCO ரியாத் பேருந்து நிலையம் மற்றும்  அஸ் சலாமில் உள்ள SAPTCO தம்மம் பேருந்து நிலையம் போன்றவற்றில் பயணிகள் இறங்கிக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!