ADVERTISEMENT

UAE: வீட்டு தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது தொடர்பான புதிய அறிவுறுத்தலை வழங்கிய அமைச்சகம்..!!

Published: 15 Mar 2023, 7:56 AM |
Updated: 15 Mar 2023, 8:46 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (Ministry of Human Resources and Emiratisation – Mohre) வீட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பது தொடர்பான அறிவிறுத்தல் ஒன்றை தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதன்படி வீட்டு தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க விரும்பினால் அதற்கான ஆட்சேர்ப்பு முகவர்களிடமிருந்து மட்டுமே பணியமர்த்த வேண்டும் என்றும், சமூக ஊடகங்கள் மூலம் தொழிலளர்களை பணியமர்த்தக்கூடாது என்றும் முதலாளிகள், அமீரக நாட்டவர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இஸ்லாமியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரமலான் மாதம் துவங்க இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் வீட்டு தொழிலாளர்களுக்கான தேவை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கு முந்தைய ஆண்டுகளில் இத்தகைய போக்கைக் கருத்தில் கொண்டு, “சமூக ஊடகங்களில் உள்ள நம்பகத்தன்மையற்ற பக்கங்கள் வீட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த விரும்புவோரை ஈர்ப்பதற்காக இதுபோன்ற வேலைவாய்ப்பை ஊக்குவிக்கத் தொடங்குகின்றன” என்று அமைச்சகம் கூறியுள்ளது. எனவே, இது போன்ற அங்கீகரிக்கப்படாத ஏஜென்சிகள் சுகாதார அபாயங்களையும், சட்டரீதியான சிக்கல்களையும் உருவாக்குவதாக அமைச்சகம் எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், சமூக ஊடகங்களின் விளம்பரங்களில் இருந்து குடியிருப்பாளர்கள் பயிற்சி பெறாத தொழிலாளர்களை வேலையில் அமர்த்த வாய்ப்புள்ளது என்றும், அதுமட்டுமின்றி அவர்கள் அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகள் வழங்குவதைப் போல சேவை உத்தரவாதத்தையும் பெற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், இது போன்ற வீட்டுத் தொழிலாளர்கள் எந்தவிதமான சுகாதார பாதிப்புகளோ அல்லது நோய் பாதிப்புகளையோ கொண்டிருக்கவில்லை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாததால், இது முதலாளிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை தொற்று நோய்களுக்கு ஆளாக்கும் வாய்ப்புள்ளதாகவும், வேலை செய்பவர் சட்ட விதிகளை அத்துமீறுபவராக இருந்தால், அது ஆபத்துகளை அதிகரிக்கும் என்றும் அமைச்சகம் எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT

அதுபோல, டிசம்பர் 15, 2022 முதல் நடைமுறைக்கு வந்த நாட்டின் புதிய வீட்டுப் பணியாளர்கள் சட்டத்தின் கீழ் முறையான உரிமம் பெற்ற ஏஜென்சிகள் மட்டுமே வீட்டுத் தொழிலாளர் சேவைகளை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாடு முழுவதும் சுமார் 80 வீட்டுப் பணியாளர் ஆட்சேர்ப்பு அலுவலகங்கள் உள்ளன என கூறப்பட்டுள்ளது. அவற்றை தொடர்புகொள்ள அமைச்சகத்தின் இணையதளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்கள் வழியாக அங்கீகரிக்கப்பட்ட அலுவலகங்களின் பட்டியலிலிருந்து அணுகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தாங்கள் பரிவர்த்தனை செய்ய திட்டமிட்டுள்ள ஏஜென்சிகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்க விரும்புவோர், 600590000 என்ற எண்ணில் அமைச்சகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பாளர்கள் உரிமம் பெற்ற தனியார் ஏஜென்சிகள் மூலம் பணியமர்த்தும்போது மூன்று உத்தியோகப்பூர்வ பேக்கேஜ்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அவையாவன;

  • பாரம்பரிய தொகுப்பு (Traditional package)
  • தற்காலிக தொகுப்பு (Temporary package)
  • நெகிழ்வான தொகுப்பு (Flexible package)

பாரம்பரிய தொகுப்பு :

இந்த விருப்பத்தின் மூலம், தொழிலாளர் முதலாளியின் கோப்பில் பதிவு செய்யப்பட்டு, இரண்டு வருட ஒப்பந்த காலத்தில் அவர்களுடன் வசிக்கும் போது, ஒப்பந்தத்தின் முதல் ஆறு மாதங்கள் ஒரு சோதனைக் காலமாகக் (trial period) கருதப்படும். இந்த சமயங்களில் பின்வரும் காரணங்களால் முதலாளி தொழிலாளரை மாற்றலாம் அல்லது ஆட்சேர்ப்புச் செலவுகளை மீட்டெடுக்கலாம். அவை:

  • ஒரு நியாயமான காரணமின்றி தொழிலாளி ஒப்பந்தத்தை நிறுத்துவது
  • தொழிலாளி ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணமின்றி வேலையிலிருந்து வெளியேறும் போது
  • தொழிலாளி மருத்துவ ரீதியாக தகுதியற்றவராக இருந்தால்
  • தொழிலாளியால் தேவைக்கேற்ப பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்றால்

மேற்கூறிய காரணங்களால் முதலாளி தொழிலாளரை மாற்றலாம் என கூறப்பட்டுள்ளது.

தற்காலிக தொகுப்பு:

இந்த பேக்கேஜ் மூலம், முதலாளிகளுக்கு தேவையான பயிற்சி பெற்ற மற்றும் தகுதியான வீட்டுத் தொழிலாளர் 24 மணி நேரத்திற்குள் வழங்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், தொழிலாளர் புதுப்பிக்கத்தக்க இரண்டு ஆண்டு ஒப்பந்தத்துடன் அலுவலகத்தின் ஸ்பான்சர்ஷிப்பின் கீழ் இருப்பதால், இதன் போது தொழிலாளி வேலை செய்யும் குடும்பத்துடன் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெகிழ்வான தொகுப்பு:

ஒரு நெகிழ்வான அடிப்படையிலான வேலை முறையை (நாள் அல்லது வாரம் அல்லது மாதம்) இந்த பேக்கேஜில் பெற முடியும். மேலும், பணியின் தன்மைக்கேற்ப ஆட்சேர்ப்புச் செலவு கணக்கிடப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. தகுதியான மற்றும் பயிற்சி பெற்ற வீட்டுப் பணியாளர்களை வழங்குதல் மற்றும் வரம்பற்ற மாற்றீடுகளை வழங்குதல் உள்ளிட்ட பல நன்மைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அதேவேளை, 24 மணி நேரத்திற்குள் வீட்டுத் தொழிலாளர்களைப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாளிகள் தங்கள் வீட்டுப் பணியாளர்களை ஊதிய பாதுகாப்பு அமைப்பில் (Wage Protection System – WPS) பதிவு செய்ய வேண்டும் என்ற முறையை அமைச்சகம் புதுப்பித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 1 முதல், இந்த அமைப்பில் தனியார் விவசாய பொறியாளர், மக்கள் தொடர்பு அதிகாரி (PRO), வீட்டுக்காப்பாளர், தனிப்பட்ட ஆசிரியர், தனிப்பட்ட பயிற்சியாளர் ஆகிய ஐந்து தொழில்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.