அமீரகத்தில் வசிக்கும் பெரும்பாலான குடியிருப்பாளர்களுக்கு UAE டிரைவிங் லைசன்ஸ் பெறுவது என்பது ஒரு பெரிய மைல்கல்லாக உள்ளது. தனது குடும்பத்துடன் சொந்தமாக வாகனத்தை ஓட்டி சென்று அமீரகத்தின் முக்கியமான இடங்களை சுற்றிப்பார்க்க விரும்புபவர்கள் அல்லது வேலையின் ஒரு பகுதியாக டிரைவிங் லைசன்ஸ் எடுக்க விரும்புபவர்கள் அதனை பெறுவதற்கு முன்னாள் முதலில் கடுமையான ஓட்டுநர் பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
அவ்வாறு முயற்சிக்கும் பலரில் ஒரு சிலர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெறுகின்றனர். மேலும் அமீரகத்தில் டிரைவிங் லைசன்ஸிற்கான ஓட்டுநர் பயிற்சி பாடங்கள் எப்போதும் மலிவானவை அல்ல. துபாயில் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான செலவு, இறுதி சாலைத் தேர்வில் (Final Road Test) முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெரும் நபருக்கே, அவர் பயின்ற ஓட்டுநர் பள்ளியைப் பொறுத்து 4,500 திர்ஹம்ஸ் முதல் 7,000 திர்ஹம்ஸ் வரை செலவாகக் கூடும்.
அதுவே அந்த இறுதி தேர்வில் தோல்வியுற்றால், கூடுதல் வகுப்புகள் மற்றும் அதிக மணி நேர கூடுதல் டிரைவிங் பயிற்சிகளை மேற்கொண்டு அவர் மீண்டும் தேர்வை எடுக்க வேண்டும். அப்படி சோதனையில் மீண்டும் மீண்டும் தோல்வியடைவது அதிக பணம் செலவாவதற்கும் வழிவகுக்கும். பெரும்பாலும் பதட்டம் அல்லது பயம்தான் இப்படி தோல்வியடைவதற்கான முக்கிய காரணமாகவும் அமைகிறது.
இது போன்ற அதிகப்படியான செலவினைத் தவிர்க்க துபாயில் உள்ள ஓட்டுநர் பள்ளிகள் தற்போது வரம்பற்ற அல்லது மொத்தமாக ஓட்டுநர் உரிமம் பேக்கேஜ்களை (unlimited or lump sum driving license package) வழங்குகின்றன. இதன் மூலம் ஓட்டுனர் உரிமத்தைப் பெறும் வரை கூடுதல் கட்டணம் எதுவுமின்றி தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும்.
இது குறித்து கலதாரி மோட்டார் டிரைவிங் சென்டரின் மார்க்கெட்டிங் தலைவர் கூறுகையில், வரம்பற்ற அல்லது மொத்தமாக ஓட்டுநர் உரிமம் பேக்கேஜ் என்பது வரம்பற்ற உள் சோதனைகள் மற்றும் வரம்பற்ற பயிற்சி வகுப்புகள் என்று ஒருவர் ஓட்டுனர் உரிமத்தைப் பெறும் வரை கூடுதல் கட்டணம் எதுவுமின்றி பயிற்சி அளிக்கப்படும் என்று விளக்கியுள்ளார். அத்துடன் வரம்பற்ற பேக்கேஜுக்கான விலை VAT வரியுடன் சேர்த்து 8,000 திர்ஹம்கள் வரை செலவாகும் என்றும் கூறியுள்ளார்.
எமிரேட்ஸ் டிரைவிங் இன்ஸ்டிடியூட்டின் வாடிக்கையாளர் சேவை மற்றும் சந்தைப்படுத்தல் இயக்குனர் பாத்திமா ரயீஸ் என்பவர் இதுபற்றி கூறுகையில், இந்த அன்லிமிட்டெட் பேக்கஜ் நெகிழ்வுத்தன்மையை மட்டுமல்ல, கற்பவர்களுக்கு மன அமைதியை வழங்குகிறது என்றும், நீங்கள் எடுக்க வேண்டிய வகுப்புகள் அல்லது இறுதி தேர்வுகளின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், நீங்கள் செலுத்திய தொகை அனைத்தையும் உள்ளடக்கும் என்பதால், கூடுதல் கட்டணத்தைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
துபாயில் ஒருவர் எடுக்க வேண்டிய பயிற்சி வகுப்புகளின் (training classes) எண்ணிக்கையானது ஓட்டுநர் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டவை. அதாவது வாகனம் ஓட்டுவதில் முன்னனுபவம் இல்லாத ஆரம்பநிலைக்கு 20 மணிநேரமும், இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஓட்டுநர் அனுபவத்துடன் செல்லுபடியாகும் அல்லது காலாவதியான அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பவர்களுக்கு 15 மணிநேரமும் பயிற்சி அளிக்கப்படும்.
அதுவே 5 ஆண்டுகளுக்கு மேல் ஓட்டுநர் அனுபவத்துடன் செல்லுபடியாகும் அல்லது காலாவதியான அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பவர்களுக்கு 10 மணிநேரம் என மிக குறுகியகால பயிற்சி அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.