அமீரக செய்திகள்

நாடு கடத்தப்படுபவர்களில் இந்தியர்களே முதலிடம்!! குவைத்திலிருந்து 9,000 வெளிநாட்டினர் நாடு கடத்தப்பட்டதாகத் தகவல்…

குவைத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டுமே பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 9,000 வெளிநாட்டினர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் கடந்த ஜனவரி 1, 2023 முதல் மார்ச் 31, 2023 வரை பல்வேறு விதிமீறல் மற்றும் குற்றங்கள் புரிந்த வெளிநாட்டவர்கள் அவர்களது நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக குவைத்தின் பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடு கடத்தப்பட்டவர்களில் சுமார் 4,000 பேர் பெண்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களில் இந்தியர்களே அதிகம் என்பதால் இந்தியா முதலிடத்திலும், இரண்டாவதாக பிலிப்பைன்ஸ் சமூகத்தினரும், இலங்கை மற்றும் எகிப்திய சமூகத்தினர் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளனர்.

கிடைத்துள்ள தரவுகளின்படி, சுமார் 700 ஆண்களும் பெண்களும் தற்போது நாடு கடத்தலுக்கான சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது. முறையான சட்ட நடைமுறைகள் முடிந்ததைத் தொடர்ந்து, அடுத்த பத்து நாட்களுக்குள் அவர்களது சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பெரும்பாலும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் வியாபாரம் காரணமாக வெளிநாட்டில் இருந்து நாடு கடத்தப்படுவது கடந்த மூன்று மாதங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் விசா காலாவதியாகியோ அல்லது சட்ட விரோதமாக நாட்டிற்குள் தங்குவது நாடு கடத்தலுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியாத மற்றும் கடுமையாக சட்டத்தை மீறும் எந்தவொரு வெளிநாட்டவருக்கும் எதிரான கடுமையான அறிவுறுத்தல்களை முதல் துணைப் பிரதமரும், உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் தலால் அல்-காலித் அவர்கள் வெளியிட்டுள்ளார். மேலும் குற்றங்களில் ஈடுபடுவோர் தாமதம் இல்லாமல் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேசமயம், சிறைச்சாலைகளில் நெரிசலைத் தடுக்கவும், கைதிகளின் கண்ணியத்தைப் பேணவும், நாடு கடத்தப்படும் சிறைகளின் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் சிறைக் கைதிகளின் சுகாதாரத் தேவைகளைப் பின்பற்றுவதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Articles

Back to top button
error: Content is protected !!