ADVERTISEMENT

துபாயில் கட்டிட தீ விபத்தில் இறந்த தமிழர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த தமிழக முதல்வர்.. உடல்களை தாயகம் கொண்டு செல்லவும் ஏற்பாடு..!!

Published: 17 Apr 2023, 8:50 PM |
Updated: 17 Apr 2023, 9:28 PM |
Posted By: Menaka

துபாயின் தேரா பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த இரண்டு தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ருபாய் (45,000 திர்ஹம்) நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. துபாயின் அல் ராஸ் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டிடத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட கோர தீ விபத்தில் சிக்கி தமிழ்நாட்டை சேர்ந்த இமாம் காசிம் (43), எஸ் முகமது ரபீக் (49) மற்றும் கேரளாவை சேர்ந்த தம்பதிகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.

ADVERTISEMENT

இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனிக்கிழமை அன்று அவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தமிழ்நாட்டை சேர்ந்த இருவரும் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் இறந்தவர்களின் உடல்களை தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதன்படி, துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் தூதர் பிஜேந்தர் சிங் அவர்கள், இறந்தவர்களை எண்ணி வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவர்களின் உடல்கள் இன்று (ஏப்ரல் 17) இரவு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும் இந்த தீ விபத்தில் கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த ஜெஷி கண்டமங்கலத் மற்றும் அவரது கணவர் ரிஜேஷ் கலங்கடன் ஆகியோர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து பிஜேந்தர் சிங் கூறுகையில், உயிரிழந்த கணவன்-மனைவியின் உடல்கள் ஏற்கனவே கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் வாடச்மேனாகவும், கார்பென்டராகவும் பணிபுரிந்து வந்த இரண்டு தமிழர்களும், தீ விபத்து ஏற்பட்டதை அறிந்து மாடியில் சிக்கித் தவிக்கும் மற்றவர்களைக் காப்பாற்ற மாடிக்கு சென்றதன் காரணமாகவே இருவரும் உயிரிழந்துள்ளனர். பிறரை மீட்க தங்கள் உயிரை ஈந்த இரு பாதுகாவலர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அக்கட்டிட குடியிருப்பாளர்கள் இன்று அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT