அமீரக செய்திகள்

ஈத் அல் ஃபித்ர்: நாளை முதல் தனியார் பள்ளிகள் மூடப்படும்..!! துபாயில் விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு…!!

அமீரகத்தில் வரவிருக்கும் ஈத் அல் ஃபித்ர் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை (வியாழன்) முதல் துபாய் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் மூடப்பட உள்ளன என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எமிரேட்டின் அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் (KHDA) செய்த ட்வீட்டில், தனியார் பள்ளிகளுக்கான ஈத் விடுமுறை நாளை தொடங்கி ஷவ்வால் 3 ஆம் தேதி வரை நீடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், “உங்களுக்கு ஒரு அற்புதமான ஓய்வு கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றும் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

ஈத் அல் ஃபித்ரை குறிக்கும் ஷவ்வால் மாதத்தின் தொடக்கமானது, ஏப்ரல் 20, வியாழன் அன்று பிறை பார்த்த பிறகு தீர்மானிக்கப்படும். எனவே, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள முஸ்லிம்களுக்கு நாளை பிறையைக் காண அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பிறை பார்க்கும் குழு, வானில் பிறையைப் பார்க்கும் எவரும் 026921166 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், சாட்சியத்தை பதிவு செய்ய அருகிலுள்ள நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

அமீரகத்தில் பிறை பார்க்கும் தேதியைப் பொறுத்து ஈத் அல் ஃபித்ருக்கு நான்கு நாட்கள் அல்லது ஐந்து நாள் விடுமுறை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் 20 அன்று பிறை தென்பட்டால், ஏப்ரல் 21 வெள்ளிக்கிழமை அன்று ஈத் அறிவிக்கப்படும். பிறை பார்க்கவில்லை என்றால், ஏப்ரல் 22 அன்று ஈத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் விடுமுறை மே 2, 2022 முதல் மே 9, 2022 வரை இருந்ததால், அமீரக மாணவர்கள் வார இறுதி நாட்களையும் சேர்த்து 9 நாட்கள் விடுமுறையை அனுபவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!