அமீரக செய்திகள்

துபாய் சாலைகளில் டிரைவர் இல்லாத டாக்ஸிகள்: விறுவிறுவென நடைபெறும் பணிகள்!! விரைவில் அறிமுகமாகும் தானியங்கு கார்கள்…

துபாயில் ஆள் இல்லாத செல்ப் டிரைவிங் ரைடு ஹெய்லிங் சேவைகளை (Self Driving Taxi) தொடங்குவதற்காக ஜுமைரா 1 பகுதியை மேப்பிங் செய்வதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சாலைகளில் ஓட்டுநர் இல்லாத டாக்ஸிகளை வலம் வரச் செய்வதற்கு, RTA மற்றும் Cruise ஒருங்கிணைந்து போக்குவரத்து சமிக்ஞைகள், அடையாளங்கள் மற்றும் ஓட்டுநர் நடத்தைக்கான அதன் தொழில்நுட்பத்தின் தரவு சேகரிப்பு மற்றும் சோதனையைத் தொடங்கியுள்ளன. இவை ஐந்து செவி போல்ட் (Chevy Bolt) அடிப்படையிலான டிரைவர் இல்லாத வாகனங்கள் மூலம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து RTAவின் பொதுப் போக்குவரத்து ஏஜென்சியின் CEO அஹ்மத் ஹஷேம் பஹ்ரோசியன் அவர்கள் கூறுகையில், ஸ்மார்ட் மொபிலிட்டி மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குவதற்கான துபாயின் தேடலில் தரவு சேகரிப்பு மற்றும் சோதனை ஒரு முக்கியமான கட்டம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குரூஸின் மேம்பட்ட AI மற்றும் தானியங்கு டிரைவிங் அமைப்புகள் (autonomous driving systems) துபாய் போக்குவரத்து நிலைமைகளுக்குப் பாதுகாப்பாக மாற்றியமைப்பதை உறுதி செய்கிறது. ஐந்து செவி போல்ட் அடிப்படையிலான தானியங்கி வாகனங்கள் ஜுமைரா 1 பகுதியில் துபாயின் போக்குவரத்து சூழலுக்கான தரவு சேகரிப்பு மற்றும் சோதனைக்கு பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, 360 டிகிரி பார்வைக் கோணத்தில் தரவு மற்றும் படங்களைப் படம்பிடிக்கும் ஆன்போர்டு லைடர்கள், ரேடார்கள் மற்றும் கேமராக்கள் மூலம் சிறந்த அளவீடுகள் மற்றும் தரவைப் பெறுவதே இதன் நோக்கமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் 2030 ஆம் ஆண்டுக்குள், துபாயில் 4,000 தானியங்கி வாகனங்களைப் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும்  திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் செல்ப் டிரைவிங் கார்களை வணிகமயமாக்கும் முதல் அமெரிக்க அல்லாத நகரமாக துபாய் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

துபாயில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், போக்குவரத்து விபத்துக்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் மற்றும் தீங்கு விளைவிக்கும் உமிழ்வைக் குறைக்கவும் ஆள் இல்லாத வாகனங்களின் பயன்பாடு அவசியமாகிறது எனவும், மேலும் இது ஸ்மார்ட் மொபிலிட்டியை ஊக்குவிக்கிறது எனவும் க்ரூஸ் மற்றும் RTA தெரிவித்திருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!