அமீரக செய்திகள்

துபாய் மெட்ரோ 14 ஆண்டுகளுக்குள் படைத்த சாதனை!! 2 பில்லியனை கடந்த பயணிகளின் எண்ணிக்கை..!!

துபாயில் வசிப்பவர்களில் பெரும்பாலானோருக்கு தினசரி வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் துபாய் மெட்ரோ செப்டம்பர் 9, 2009 அன்று தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை சுமார் 2 பில்லியன் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு பெரிய மைல்கல்லை எட்டியுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

இந்த சாதனை படைத்த அதிநவீன போக்குவரத்து அமைப்பு 129 ரயில்களைக் கொண்டு நகரம் முழுவதும் 53 நிலையங்களுக்கு சேவை செய்கிறது. மேலும், சராசரியாக நாளொன்றுக்கு 600,000 பயணிகளை சுமந்து செல்வதாகத் தரவுகள் வெளியாகியுள்ளன. நேரம் தவறாமையில் 99.7 சதவிகிதத்துடன் செயல்படும் துபாய் மெட்ரோ, குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையின் அடையாளமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து வெளியிடப்பட்ட தரவுகளின் படி, மெட்ரோவின் ரெட் லைன் 1.342 பில்லியன் பயணிகளையும், கிரீன் லைன் 673.531 மில்லியன் பயணிகளையும் ஏற்றிச் சென்றுள்ளது. கூடுதலாக, துபாய் மெட்ரோ சர்வதேச பாதுகாப்பு தரத்தை விஞ்சி 99.7% நேரத்தை கடைபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பகால எதிர்ப்பும் ஷேக் முகம்மது எடுத்த முடிவும்:

இது குறித்து ஷேக் முகமது அவர்கள் வெளியிட்ட ட்வீட்டில், துபாய் மெட்ரோவை தொடங்குவதற்கு முன்பு ஆரம்ப காலத்தில் எதிர்ப்புகள் இருந்ததாக குறிப்பிட்டிருந்தார். தொடக்கத்தில் மெட்ரோ போக்குவரத்து குறித்த அறிமுகமின்மை மற்றும் அதிகாரிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக பல எதிர்ப்புகள் இருந்தபோதிலும், அப்போது நாட்டிற்கும் சமூகத்திற்கும் முன்னேற்றம் மற்றும் செழிப்பை அடைய பொறுப்பை ஏற்றுக்கொள்வது மற்றும் கடினமான முடிவுகளை எடுப்பது அவசியம் என்று மக்களை வலியுறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி, துபாய் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றியதில் பெருமிதம் கொள்வதாகக் கூறிய அவர், சமூகங்களின் முன்னேற்றத்திற்காக தைரியமான தேர்வுகளை எடுக்க முடிவெடுப்பவர்களையும் ஊக்கப்படுத்தியுள்ளார்.

இது குறித்துக் கூறிக்கொண்டிருக்கையில், துபாயின் பட்டத்து இளவரசரும், துபாய் நிர்வாக சபையின் தலைவருமான மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், ஷேக் முகமதுவின் தொலைநோக்குப் பார்வையால் துபாயின் உலகத் தரம் வாய்ந்த போக்குவரத்து நெட்வொர்க்கை உருவாக்க முடியும் என்று கூறியுள்ளார். மேலும் துபாய் மெட்ரோ, எமிரேட்டின் பல்வேறு முக்கிய மாவட்டங்களை இணைக்கும் ஒரு போக்குவரத்து அமைப்பின் முதுகெலும்பாக மாறியுள்ளது, இது பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் சுமூகமான பயணத்தை உறுதி செய்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

துபாய் மெட்ரோ பற்றிய சில சுவாரஸ்சிய தகவல்கள்:

  1. துபாய் மெட்ரோ உலகின் மிக நீளமான ஓட்டுநர் இல்லாத ரயில் நெட்வொர்க் ஆகும். இதன் நீளம் 89.3 கிமீ ஆகும்.
  2. செப்டம்பர் 9, 2009 அன்று தொடங்கப்பட்டதில் இருந்து இரண்டு பில்லியன் பயணிகளுக்கு சேவை வழங்கி சாதனை படைத்துள்ளது.
  3. ரூட் 2020 இல் உள்ள 7 நிலையங்கள் உட்பட 53 மெட்ரோ நிலையங்களுக்கு LEED தங்கச் சான்றிதழ் வழங்கப்பட்டது
  4. துபாய் மெட்ரோ 125 ரயில்களைக் கொண்டுள்ளது

கட்டுப்பாட்டு மையம்:

RTA இன் ரயில் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் உலகின் அதிநவீன கட்டுப்பாட்டு மையங்களில் ஒன்றாகும். இது ரெட் மற்றும் கிரீன் லைன்களில் 24/7 மெட்ரோ சேவையின் தினசரி செயல்பாடுகளை நிர்வகிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மையம் துபாய் மெட்ரோவிற்கு சர்வதேச அளவிலான பாதுகாப்பு, செயல்பாட்டுத் திறன் மற்றும் சரியான நேரத்தில் சேவை செய்ய உதவுவதுடன்  பராமரிப்பு நடவடிக்கைகள் மற்றும் முடிவெடுப்பதை துரிதப்படுத்துகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!