அமீரக செய்திகள்

துபாயில் புதிதாக இரண்டு பெரிய பாலங்களும் சுரங்கப் பாதையும் திறப்பு..!! பயண நேரத்தை 104 நிமிடங்களில் இருந்து வெறும் 16 நிமிடங்களாகக் குறைக்கும் என்று தகவல்…

துபாயின் ஷிந்தகா நடைபாதையில் 2.3 கிமீ நீளமுள்ள இரண்டு பெரிய பாலங்கள் மற்றும் ஒரு சுரங்கப்பாதை புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது. அல் ஷிந்தகா காரிடார் மேம்பாட்டுத் திட்டமானது RTA ஆல் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாகும், இதன் மொத்த மதிப்பீடு 5.3 பில்லியன் திர்ஹம் என்று தகவல்கள் கூறுகின்றன.

இது ஒரு மணி நேரத்திற்கு சுமார் 27,200 வாகனங்கள் செல்லும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது. மேலும், புதிதாக திறக்கப்பட்டுள்ள இரண்டு பாலங்களும் வடக்குப் பகுதியில் இருந்து இன்ஃபினிட்டி பிரிட்ஜ் (Infinity Bridge) மற்றும் அல் ஷிந்தகா சுரங்கப்பாதையால் இணைக்கப்பட்டுள்ளதாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது.

இவை இறுதியாக ஷேக் ரஷீத் சாலை மற்றும் ஷேக் கலீஃபா பின் சயீத் ஸ்ட்ரீட் சந்திப்பில் RTA தற்போது கட்டும் பாலங்களுடன் இணைக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. அல் கலீஜ் ஸ்ட்ரீட், காலித் பின் அல் வலீத் சாலை மற்றும் அல் குபைபா சாலை ஆகியவற்றுக்கு இடையே அமைந்துள்ள ஃபால்கன் இன்டர்சேஞ்ச் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பாலங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், ஃபால்கன் இன்டர்சேஞ்சின் மேம்பாடு அல் ஷிந்தகா காரிடாரில் (அல் கலீஜ் மற்றும் அல் மினா ஸ்ட்ரீட்) சீரான போக்குவரத்து ஓட்டத்தை செயல்படுத்துவதாகவும், மேலும் இந்த இரண்டு சாலைகளின் திறன் மற்றும் போக்குவரத்து பாதுகாப்பை அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம், போர்ட் ரஷீதுக்கு நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களையும், புதிய பாலத்தின் கீழ் கூடுதல் வாகன நிறுத்துமிடங்களையும் வழங்குவதாக RTA இன் இயக்குநர் ஜெனரலும் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவருமான மத்தர் அல் தாயர் கூறியுள்ளார்.

புதிய பாலங்களும் சுரங்கப்பதையும்:

>> அல் கலீஜ் ஸ்ட்ரீட்டில் சுமார் 1,825 மீட்டர் நீளம் கொண்ட இரண்டு பாலங்கள் ஒவ்வொன்றும் ஆறு பாதைகளை கொண்டுள்ளன. ஒரு மணி நேரத்திற்கு மொத்தம் 12,000 வாகனங்கள் வரை இரு திசைகளிலும் செல்லும் திறன் கொண்டது. 750 மீட்டர் நீளம் கொண்ட முதல் பாலமும், 1,075 மீட்டர் நீளம் கொண்ட இரண்டாவது பாலமும் தெற்கு திசையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

>> அதுபோல, இருவழிச் சுரங்கப் பாதையானது, ஒரு மணி நேரத்திற்கு 3,200 வாகனங்கள் வரை இடமளிக்கும் என்று அல் டேயர் விளக்கியுள்ளார். மேலும், இந்த சுரங்கப்பாதை 500 மீட்டர் வரை நீண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும், காலித் பின் அல் வலீத் சாலையில் இருந்து அல் கலீஜ் ஸ்ட்ரீட் வரை இருவழிச் சுரங்கப் பாதையின் வலது திருப்பங்களுக்கு ஒற்றைப் பாதை சாய்வாக இருக்கும் திட்டத்தில் மூன்றாவது பாலத்தின் கட்டுமானம் இறுதிப் பணியில் இருப்பதாகவும், இந்த பாலம் 250 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் ஒரு மணி நேரத்திற்கு 1,600 வாகனங்கள் வரை செல்லும் திறன் கொண்டது எனவும் கூறியுள்ளார். இந்த ஆண்டு ஜூலைக்குள் அனைத்து பணிகளும் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக RTA தலைவர் தெரிவித்துள்ளார்.

வெகுவாகக் குறையும் பயண நேரம்:

அல் ஷிந்தகா காரிடார் மேம்பாட்டுத் திட்டமானது சுமார் 13 கிமீ பரப்பளவில் 15 சந்திப்புகளின் கட்டுமானத்தை உள்ளடக்கியது. அதன் பாரிய நோக்கம் காரணமாக, திட்டம் ஐந்து கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இது சுமார் ஒரு மில்லியன் மக்களுக்கு சேவை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2030 ஆம் ஆண்டளவில் பயண நேரத்தை 104 நிமிடங்களில் இருந்து வெறும் 16 நிமிடங்களாகக் குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.

மற்ற திட்டங்கள்:

>> அல் ஷிந்தகா காரிடார் மேம்பாட்டுத் திட்டத்தின் 4 ஆம் கட்டத்தின் கீழ், 3.1கிமீ நீளம் கொண்ட மூன்று பாலங்கள் அமைக்கும் முதல் ஒப்பந்தத்தை RTA சமீபத்தில் வழங்கியுள்ளது. மூன்று பாலங்களில் உள்ள அனைத்து பாதைகளும் ஒரு மணி நேரத்திற்கு 19,400 வாகனங்கள் செல்லும் திறன் கொண்டது.

>> ஒவ்வொரு திசையிலும் மூன்று பாதைகளைக் கொண்ட முதல் பாலம் 1,335 மீட்டர் நீளம் உடையது. இது ஷேக் ரஷித் சாலை மற்றும் பால்கன் இன்டர்சேஞ்ச் இடையே போக்குவரத்து ஓட்டத்தை எளிதாக்குவதுடன் இரு திசைகளிலும் ஒரு மணி நேரத்திற்கு 10,800 வாகனங்கள் செல்லும் திறன் கொண்டது.

>> இரண்டாவது பாலம் 780 மீட்டர் நீளம் கொண்டது, இது பால்கன் இன்டர்சேஞ்சிலிருந்து அல் வாஸ்ல் சாலைக்கு செல்லும் மூன்று வழித்தடங்களைக் கொண்டுள்ளது.

>> மூன்றாவது பாலம் 985 மீட்டர் நீளம் கொண்டது, இது ஒரு மணி நேரத்திற்கு 3,200 வாகனங்கள் செல்லும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது. மேலும், ஜுமைரா ரோட்டில் இருந்து அல் மினா ஸ்ட்ரீட் மற்றும் பால்கன் இன்டர்சேஞ்ச் நோக்கி செல்லும் போக்குவரத்திற்கு இரண்டு பாதைகள் உள்ளன.

Related Articles

Back to top button
error: Content is protected !!