அமீரக செய்திகள்

விதிகளை மீறி முட்டை, கோழி இறைச்சிகளின் விலையை உயர்த்தினால் 10,000 திர்ஹம் அபராதம்!! பொருளாதார அமைச்சகத்தின் அதிரடி சோதனையில் சிக்கும் நிறுவனங்கள்…

ஐக்கிய அரபு அமீரகத்தில் முட்டை மற்றும் கோழி இறைச்சிகளின் விலையை 13 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்தினால் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் சப்ளையர்களுக்கு 10,000 திர்ஹம்களுக்கு குறையாத அபராதம் விதிக்கப்படும் என்று பொருளாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. மீண்டும் விதியை மீறினால் அபராதம் 200,000 திர்ஹம் வரை அதிகரிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம், நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான 2022 இன் ஃபெடரல் சட்ட எண்.15ஐ புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது, இதில் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் உரிமைகளை மீறும் பிற நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட அபராதங்கள் உட்பட பல புதுப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், விதிமீறல்கள் மற்றும் அபராதங்கள் குறித்த விவரங்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், சில்லறை விற்பனையாளர்களுக்கு, மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் இறக்குமதியின் அதிக செலவுகளுக்கு ஏற்ப, முட்டை மற்றும் கோழி இறைச்சிகளின் விலையை 13 சதவீதம் வரை உயர்த்த அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும், அவை 13 சதவீத வரம்பை விட அதிகமாக செல்லாது என்பதை உறுதிப்படுத்தவும், ஆய்வாளர்கள் நாடு முழுவதும் உள்ள மளிகை கடைகள், முட்டை மற்றும் கோழி சந்தைகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களை சோதனை செய்து வருவதாகவும் தகவல் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்று, ரமலான் மாதத்தில் மட்டும் சுமார் 300 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தக் கள ஆய்வின் போது, ​​விலை உயர்வை மீறியதற்காக பல நிறுவனங்களுக்கு ஏற்கனவே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, சப்ளையர்கள் மற்றும் நுகர்வோர் இடையே நியாயமான மற்றும் சமநிலையான உறவைப் பேணுவதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது போன்று கடந்த 2022 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட 94,123 ஆய்வுகளில், 4,227 மீறல்கள்களும், 2023 இன் முதல் சில மாதங்களில் நடத்தப்பட்ட 8,170 ஆய்வுகளில் 1,030 மீறல்களும்  பதிவு செய்யப்பட்டதாகத் தரவுகள் வெளியாகியுள்ளன.

எனவே, வாடிக்கையாளர்கள் பல்பொருள் அங்காடிகள் மற்றும் பிற சில்லறை விற்பனை நிலையங்களில் ஏதேனும் விலை வித்தியாசத்தைக் கண்டால் 8001222 என்ற எண்ணில் அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஷார்ஜாவில் வசிப்பவர்கள் 80080000 என்ற எண்ணிலும், அஜ்மானில் உள்ளவர்கள் 80070 என்ற எண்ணிலும் புகாரளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்திற்கு கட்டுப்பட்டு, பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை பராமரிக்குமாறு அனைத்து சில்லறை விற்பனையகங்கள் மற்றும் சப்ளையர்களுக்கு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

மேலும், ஷிப்பிங் செலவுகள் மற்றும் தீவனம் போன்ற இறக்குமதி மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக ஏற்பட்ட நஷ்டத்தை கருத்தில் கொண்டு, இத்துறையில் செயல்படும் பல நிறுவனங்கள் சமர்ப்பித்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த தற்காலிக விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!