அமீரக செய்திகள்

UAE: எந்தெந்த சூழ்நிலைகளில் முதலாளி தொழிலாளியின் சம்பளத்தை நிறுத்தி வைக்கலாம் அல்லது பிடித்தம் செய்யலாம்..??

ஐக்கிய அரபு அமீரகத்தின் அனைத்து பொது மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களில் சுமார் 90 சதவீதம் பேர் வெளிநாட்டினர் ஆவர். அமீரகத்தில் அவர்கள் பெறுகின்ற சம்பளத்தையே தாய்நாட்டில் உள்ள தங்களின் குடும்பம் நம்பியிருக்கிறது. ஒவ்வொரு ஊழியரின் வாழ்விலும் முக்கியப் பங்கு வகிக்கும் சம்பளத்தை சில சூழ்நிலைகளில், ஒரு முதலாளி நிறுத்தி வைக்கலாம் அல்லது கழிக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? அப்படி எந்தெந்த சூழ்நிலைகளில் மூலம் ஒரு முதலாளி ஒரு தொழிலாளியின் ஊதியத்தை நிறுத்தி வைக்கலாம் அல்லது கழிக்கலாம் என்பதை கீழே காணலாம்.

>> ஊழியரின் எழுத்துப்பூர்வ ஒப்புதலைப் பெற்ற பிறகு மற்றும் எந்த வட்டியும் இல்லாமல், அவர்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை தொழிலாளியின் சம்பளத்தில் இருந்து மாதாந்திர அடிப்படையில் பிடித்தம் செய்வதன் மூலம் திரும்பப் பெறலாம்.

>> ஊழியருக்கு அவரது உரிமைகளை விட அதிகமாக செலுத்தப்பட்ட தொகைகளை மீட்டெடுக்கும் போது அவரின் சம்பளத்தை கழிக்கலாம். கழிக்கப்படும் தொகையானது ஊதியத்தில் 20 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது.

>> நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி, தொழிலாளிக்கு வழங்கப்படும் போனஸ், ஓய்வூதியங்கள் மற்றும் காப்பீடு ஆகியவற்றுக்காக ஊதியம் கழிக்கப்படலாம்.

>> சேமிப்பு நிதிக்கான ஊழியரின் பங்களிப்புகள் அல்லது அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிதிக்கு செலுத்த வேண்டிய கடன்கள் போன்றவற்றிற்காக ஊதியத்தை கழிக்கலாம்.

>> எந்தவொரு சமூகத் திட்டத்திற்கான தவணைகள் அல்லது முதலாளியால் வழங்கப்படும் மற்றும் அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிற நன்மைகள் அல்லது திட்டத்தில் பங்கேற்கப் பணியாளர் எழுத்துப்பூர்வமாக ஒப்புக் கொண்டிருந்தால் ஊதியம் கழிக்கப்படும்.

>> ஊழியர் செய்த விதிமீறல்களுக்கு அவர் சம்பளத்தில் இருந்து கழிக்கப்படும் தொகையானது 5 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

>> ஊழியருக்கு வழங்கப்பட்ட ஜீவனாம்சக் கடனைத் தவிர, ஒரு தீர்ப்பின்படி செலுத்த வேண்டிய கடன்கள் போன்றவை தொழிலாளிக்கு செலுத்த வேண்டிய ஊதியத்தில் கால் பங்கிற்கு மிகாமல் கழிக்கப்படலாம்.

அதேசமயம், ஊதியத்திலிருந்து விலக்கு அல்லது நிறுத்தி வைப்பதற்கு பல காரணங்கள் இருந்தால், எல்லா சந்தர்ப்பங்களிலும் ஊதியத்தை கழித்தல் அல்லது நிறுத்தி வைத்தலானது ஊதியத்தில் 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சட்ட ஆலோசகர்கள் கூறுகையில், முதலாளி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தனது ஊழியரிடமிருந்து ஊதிய குறைப்பிற்காக பயணத் தொகையை (travel allowance) கழிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், வேலை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன், வருடாந்திர ரிட்டர்ன் டிக்கெட்டைத் தெளிவுபடுத்துமாறும் தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!