அமீரக செய்திகள்

UAE: இலவச இஃப்தார் உணவை வழங்கும் உணவகம்..!! தினசரி 700 க்கும் மேற்பட்ட இஃப்தார் உணவுப்பெட்டிகள் விநியோகம் செய்வதாக தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பாலான உணவகங்கள் புனித ரமலான் மாதத்தில் இஃப்தாருக்கான உணவில் வாடிக்கையாளர்களை பல்வேறு விதங்களில் ஈர்க்க ப்ரொமோஷன்களை மேற்கொண்டு வரும் நிலையில் ஷார்ஜாவில் உள்ள ஒரு உணவகமானது வித்தியாசமான முறையில் இஃப்தார் உணவுகளை வழங்கி வருகிறது. அதாவது இந்த இஃப்தார் உணவுகளை தேவைப்படுவோருக்கு இலவசமாக வழங்கி வருவதாக அல் நவாப் எனும் உணவகம் அறிவித்துள்ளது.

மேலும், முஜர்ரா மற்றும் மஹத்தாவில் உள்ள அதன் விற்பனை நிலையங்களுக்கு வெளியே ஒரு பலகையில், ‘உங்களுக்கு தேவையெனில் இஃப்தார் உணவு எங்களிடம் உள்ளது’, ‘யார் வேண்டுமானாலும் தங்களின் நம்பிக்கை மற்றும் தேசத்தைப் பொருட்படுத்தாமல் இலவச உணவை பெற வரலாம்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ரமலான் மாதத்தில் அல் நவாப் உணவகம் தினமும் 700க்கும் மேற்பட்ட உணவுகளை தினசரி வழங்கி வருவதாக கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு உணவுப் பெட்டியிலும் 500 கிராம் சிக்கன் பிரியாணி, ஒரு கொத்து பேரீச்சம்பழம், பழங்கள், சாலட் மற்றும் ஒரு தண்ணீர் பாட்டில் ஆகியவை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த உணவகத்தின் உரிமையாளர் ஜஹான்செப் யாசீன் அவர்கள் கூறுகையில், இலவச இஃப்தார் உணவானது தேவைப்படும் அனைவருக்கும் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தாலும், பைக் ஓட்டுபவர்கள், வேலை தேடுபவர்கள், அருகிலுள்ள கட்டுமான தளத்தில் இருக்கும் ப்ளூ காலர் தொழிலாளர்கள், டாக்ஸி டிரைவர்கள் மற்றும் பக்கத்தில் வசிப்பவர்கள் போன்றவர்களே பெரும்பாலும் வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமீரக தலைவர்களின் சிறந்த தொண்டு நடவடிக்கைகள், எங்களை இந்த ஆசீர்வதிக்கப்பட்ட மாதத்தில் இத்தகைய நற்காரியங்கள் புரிய எங்களை மிகவும் ஊக்குவிக்கின்றன என்று அவர் கூறியுள்ளார்.

இலவசமாக வழங்கப்படும் உணவு என்பதால், அதன் தரத்திலோ சுகாதாரத்திலோ சமரசம் செய்து கொள்ளவில்லை என்றும், குறிப்பாக அல்லாஹ்வின் பாதையில் கொடுக்கும்போது, பஃபே மெனுவில் உள்ள உணவுகளில் இருக்கும் அதே தரமான பொருட்களைக் கொண்டு, அதே சமையலறையில் இலவச இஃப்தார் உணவைத் தயாரிப்பதால் மிக உயர்ந்த தரத்தைப் பேணுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வேலையை இழந்தோர், வேலை தேடுவோர், தொழிலாளர்கள் என பலர் இந்த உணவகம் வழங்கும் இலவச இஃப்தார் உணவினால் பயன் பெறுவதாக தெரிவித்துள்ளனர். இது போன்ற உணவுகளை வாங்குவதற்கு ஏறக்குறைய 70 திர்ஹம்கள் செலவாகும். ஆனால் இங்கு இலவசமாக வழங்கப்படுகிறது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!