ADVERTISEMENT

ரமலான் மாத இறுதி வரையிலும் புழுதிப்புயல், கனமழை பெய்ய வாய்ப்பு..!! சவூதி வானிலை மையம் தகவல்..!!

Published: 9 Apr 2023, 10:53 AM |
Updated: 10 Apr 2023, 10:00 AM |
Posted By: Menaka

சவுதி அரேபியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய கனமழை ரமலான் மாதத்தின் இறுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அறிவித்துள்ளது. மேலும், புழுதியுடன் புயல் மற்றும் பனிப்பொழிவு ஏற்படும் என்றும் கணித்துள்ளது.

ADVERTISEMENT

குறிப்பாக, திங்கள் முதல் வியாழன் வரை காசிம், ரியாத், கிழக்கு மாகாணம் மற்றும் ஹெயில் ஆகிய பகுதிகளில் புழுதிப் புயல்கள், பனிப்பொழிவு மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஞாயிறு, திங்கள், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் ஆசிர், அல்-பஹா, ஜசான், மக்கா, நஜ்ரான் மற்றும் மதீனா பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்யும் என்று NCM அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தபூக், அல்-ஜூஃப் மற்றும் வடக்கு எல்லைப் பகுதியில் திங்கள் முதல் புதன்கிழமை வரை மிதமான முதல் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், திங்கள் முதல் வியாழன் வரை கிழக்கு மாகாணத்திலும், ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் மக்கா, தபூக் மற்றும் மதீனா ஆகிய பகுதிகளிலும் பெய்யும் என்றும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அடுத்த வாரத்தின் நடுப்பகுதி வரை பெரும்பாலான பகுதிகளில் மழை தொடரும் என்று முதற்கட்ட கணிப்புகள் தெரிவித்துள்ள நிலையில், வானிலை நிலவரம் மற்றும் அதனால் பாதிக்கப்பட்ட பகுதிகள் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற, அதன் இணையதளம் மற்றும் சமூக ஊடக கணக்குகளில் பின்தொடருமாறு பொதுமக்களை NCM வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் அனைவரும் தகுதி வாய்ந்த அதிகாரிகளால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் NCM அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT