அமீரக செய்திகள்

சூடானில் நிலவி வரும் பதற்றம்..!! சவூதி விமானத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு..!!

வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் தலைநகர் கார்ட்டூம் பகுதியில் அந்நாட்டின் ராணுவத்தினருக்கும் துணை ராணுவ படையினருக்கும் இடையே மோதல் வெடித்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மோதலில் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்துவதுடன் பல இடங்களில் குண்டுவீச்சு தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சூடானில் இருந்து சவுதி அரேபியாவிற்கு புறப்படத் தயாராகிக்கொண்டிருந்த பயணிகள் விமானத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக சவூதி அரேபியாவைச் சேர்ந்த விமான நிறுவனமான சவுதியா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவிற்கு புறப்பட்ட ஏர்பஸ் A330 விமானம் ரியாத்திற்கு புறப்படுவதற்கு முன்னதாக துப்பாக்கிச் சூட்டில் சேதம் அடைந்தது என்றும் இருந்தபோதிலும் பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் விமானத்தின் அனைத்து உறுப்பினர்களும் சூடானில் உள்ள சவுதி தூதரகத்திற்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்துள்ளனர் என்று விமான நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சூடானில் இருந்து புறப்படும் மற்றும் சூடானை நோக்கிச் செல்லும் விமானங்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் அமீரகம் உள்ளிட்ட மற்ற நாடுகளும் சூடானிற்கான விமானங்களை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளன.

இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகம் சூடானில் உள்ள அனைத்து தரப்பினரையும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. மேலும், இந்த பிரச்சினையை பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

சூடானின் பிரதான துணை இராணுவக் குழு சனிக்கிழமையன்று ஜனாதிபதி மாளிகை, இராணுவத் தளபதியின் இல்லம் மற்றும் கார்டூம் சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்றியதாக அறிவித்துள்ளது. ஆனால், இராணுவம் இதனை எதிர்த்துப் போராடுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில், சூடானில் ஆங்காங்கே வெடித்து வரும் கலவரங்கள் குறித்து உலக நாடுகள் கவலை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!