அமீரக செய்திகள்

UAE: ரமலானை முன்னிட்டு ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளத்தை முன்கூட்டியே வழங்க உத்தரவிட்ட துபாய் ஆட்சியாளர்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியத்தை முன்கூட்டியே வழங்க அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவின் படி, ஈத் அல் பித்ர் எனப்படும் ரமலான் பண்டிகைக்கு முன்னதாக அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 17 முதல் சம்பளம் வழங்கப்படவுள்ளது.

அமீரகத்தில் புனித ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கும் ஈத் அல் பித்ர் விடுமுறை, ஏப்ரல் 21 ம் தேதி அன்று வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரமலான் பண்டிகைக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் ​​வருடத்தின் முதல் நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் உத்தரவுகளுக்கு இணங்க, துபாயின் பட்டத்து இளவரசரும், துபாய் நிர்வாகக் குழுவின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் துபாய் அரசு ஊழியர்களுக்கு ஈத் அல் பித்ர் பண்டிகைக்கு முன்பாகவே ஏப்ரல் மாத சம்பளம் வழங்குமாறு ஆணையிட்டுள்ளார்.

அவரது ஆணையின் படி, அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளத்தை ஏப்ரல் 17 ம் தேதி முதலே துபாய் அரசு வழங்கவுள்ளது. ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ரமலான் பண்டிகையை செழிப்பாக கொண்டாடி அனுபவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!