அமீரக செய்திகள்

அமீரகத்தில் இன்று முதல் நீண்ட நோன்பு நேரம்..!! 14 மணி நேரத்திற்கு மேல் நீடிக்கும் என தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியிருப்பாளர்கள் புனித ரமலான் மாதத்தின் மீதமுள்ள நாட்களில் நாளொன்றுக்கு 14 மணி நேரத்திற்கும் மேலாக நோன்பு இருப்பார்கள் என்று எமிரேட்ஸ் வானியல் சங்கத்தின் (Emirates Astronomy Society) இயக்குநர்கள் குழுவின் தலைவர் இப்ராஹிம் அல் ஜார்வான் அவர்கள் தெரிவித்துள்ளார். அதாவது, ரமலான் மாத இறுதியில் அமீரகம் மற்றும் வளைகுடா நாடுகளில் ரமலான் நேரங்கள் பகல்நேரம் நீண்டு இரவுகள் குறைவதால் நோன்பு காலம் அதிகரிக்கும் என்றும் அல் ஜர்வான் கூறியிருக்கிறார்.

இருப்பினும், நோன்பு இருக்கும் சரியான நேரம் இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடும் என்றும், ஆனால் வித்தியாசம் சில நிமிடங்களுக்கு மேல் இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு ரமலான் மாதமானது வசந்த கால தொடக்கத்துடன் ஒத்துப் போவதால் நீண்ட பகல் நேரம் மற்றும் குறுகிய இரவு நேரங்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

மிக நீண்ட நோன்பு காலம்:

ரமலான் மாதத்தில் ஐஸ்லாந்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தினமும் மிக நீண்ட நோன்பு காலத்தை அனுபவிப்பார்கள். அதாவது, ரமலான் மாதத்தின் முதல் நாளான மார்ச் 23 அன்று 15 மணி நேரம் 33 நிமிடங்கள் வரை அந்நாட்டில் நோன்பு காலம் நீடித்ததாக கூறப்பட்டுள்ளது.

அதுபோல, இறுதி நாளான ஏப்ரல் 21 அன்று, ஃபஜ்ர் மற்றும் மக்ரிப் தொழுகைகளுக்கு இடையிலான கால அளவு 16 மணி 20 நிமிடங்கள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் MENA பகுதியில், அல்ஜீரியா ரமலானின் கடைசி நாளில் 14 மணிநேரம், 58 நிமிடங்கள் என மிக நீண்ட நோன்பு காலத்தைக் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமீரகத்தில் மார்ச் 23 அன்று தொடங்கிய புனித ரமலான் மாதம், ஏப்ரல் 20 அன்று முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஈத் அல் ஃபித்ர் பெரும்பாலும் ஏப்ரல் 21 அன்று இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!