ADVERTISEMENT

சுற்றுலாவுக்காக மட்டும் 121 பில்லியன் திர்ஹம்களை செலவிட்ட ஐக்கிய அரபு அமீரகம்!! – ஷேக் முகமது செய்த ட்வீட்…

Published: 5 May 2023, 6:29 PM |
Updated: 5 May 2023, 6:57 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் இது வரை இல்லாத அளவிற்கு 2022 இல் சுற்றுலாவிற்காக மட்டும் 70 சதவீதம் செலவிடப்பட்டு அதன் மதிப்பு 121 பில்லியன் திர்ஹம்களை எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது பிராந்தியத்திலேயே மிக அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் செய்த ட்வீட்டில், மூன்று வருட சரிவுக்குப் பிறகு உலகளாவிய சுற்றுலா மீண்டு வந்துள்ளது என்றும், அமீரகத்தின் சுற்றுலாத் துறையும் வலுவாக மீட்சி அடைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 150 நாடுகளில் இருந்து 2,000 சுற்றுலா நிறுவனங்களை வழங்கும் அரேபிய பயண சந்தை 2023 நிகழ்வை (Arabian Travel Market) ஷேக் முகமது பார்வையிட்டபோது இது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், ஏழு ஆண்டுகளுக்குள் 40 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அடையும் அமீரகத்தின் இலக்கையும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதேசமயம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத் துறையின் பங்களிப்பை 450 பில்லியன் திர்ஹம்களாக அதிகரித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், உலகின் சிறந்த மற்றும் சுறுசுறுப்பான பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் குறிக்கோளுடன், நமது தேசிய பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் மேம்படுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதாவது கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட UAE சுற்றுலா யுக்தி 2031 (UAE Tourism Strategy 2031) பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார். இது சுற்றுலா முதலீடுகளாக கூடுதல் 100 பில்லியன் திர்ஹம்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் “சுற்றுலா நமது பொருளாதாரத்தை பல்வகைப்படுத்துவதற்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் உலகளாவிய போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கும் முக்கியமானது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

நாட்டின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் 25 முன்முயற்சிகள் மற்றும் கொள்கைகள் இந்த திட்டத்தில் அடங்கும் என கூறப்படுகிறது. இதனையொட்டி, பயணம், விமானப் போக்குவரத்து மற்றும் விருந்தோம்பல் உள்ளிட்ட பல்வேறு தொடர்புடைய துறைகளில் சுற்றுலா முதலீட்டை ஊக்குவிப்பதுடன் புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கவும், உள்ளூர் சந்தைக்கு  சர்வதேச நிறுவனங்களை ஈர்க்கவும், இது பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.