அமீரக செய்திகள்

இரண்டு திர்ஹம்ஸில் துபாய் க்ரீக்கை சுற்றிக் காட்டும் பாரம்பரிய அப்ராவும் அது பற்றிய முழு தகவல்களும்..!!

துபாயில் உள்ள பர் துபாய் மற்றும் தேரா ஆகிய பகுதிகளை பிரிக்கும் 14 கிலோமீட்டர் நீளமுள்ள துபாய் க்ரீக்கின் அழகிய தோற்றத்தை வெறும் 2 திர்ஹம்ஸில் சுற்றிப்பார்க்கலாம் என்றால் நம்ப முடிகிறதா.? ஆம், உங்களுக்காகவே இருக்கிறது அப்ரா படகு பயணம். அப்ரா என்பது துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் (RTA) இயக்கப்படும் ஒரு பாரம்பரிய மரப் படகு ஆகும். இதற்கு அரபு மொழியில் ‘கடந்து செல்வது’ என்று பொருள். மேலும், இது எமிரேட்டின் மிகப் பழமையான மற்றும் மலிவான போக்குவரத்து முறையாகும்.

அதிலும் மோட்டார் பொருத்தப்பட்ட அல்லது எரிபொருளால் இயக்கப்படும் அப்ரா வகையைப் பொறுத்து, உங்களிடம் ஒரு பயணத்திற்கு 1 முதல் 2 திர்ஹம் வரை கட்டணம் வசூலிக்கப்படும். இந்த அப்ராக்கள் சில நிமிடங்களுக்கு ஒருமுறை க்ரீக்கின் இருபுறமும் புறப்பட்டு, பாரம்பரிய சூக்குகள், சுற்றுலா இடங்கள் மற்றும் பாரம்பரிய பகுதிகள் மற்றும் அருங்காட்சியகங்கள் போன்ற பர் துபாய் மற்றும் தேராவில் உள்ள பிரபலமான இடங்களுக்கு அருகில் பயணிகளை இறக்கிவிடும்.

ஆகவே, துபாயின் செழுமையான கலாச்சாரத்தின் கடந்த காலத்தை பார்வையிட விரும்பும் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள், கலகலப்பான மற்றும் பரபரப்பான துபாய் க்ரீக்கை ஒரு அப்ரா படகில் எப்படி சுற்றிப்பார்க்கலாம் அல்லது ஆராயலாம் என்பது பற்றிய அனைத்து விவரங்களையும் இங்கே தெரிந்துகொள்வோம்:

எரிபொருளில் இயங்கும் பாரம்பரிய அப்ரா – 2 திர்ஹம்:

— பாரம்பரியப் படகின் நவீனப் பதிப்பாக இந்த அப்ரா படகு உள்ளது, ஏனெனில் இது பெட்ரோல் அல்லது எரிபொருளில் இயங்குகிறது. இதில் கிட்டத்தட்ட 20 பேர் வரை பயணிக்கும் அளவிற்கு அதிக இருக்கை வசதிகளும் உள்ளது.

— இது பயணிக்கும் வழித்தடங்களில், அல் ஃபஹிதி வரலாற்றுப் பகுதி, க்ரீக்கை ஒட்டி அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சூக்குகள் மற்றும் துபாய் அருங்காட்சியகம் ஆகியவற்றை பயணிகள் கண்டறியலாம்.

— அவற்றுடன் பாரம்பரிய வீடுகள், மினாராக்கள், மசூதிகள் மற்றும் தேராவில் உள்ள தேரா இரட்டை கோபுரங்கள் போன்ற நவீன மற்றும் சமீபத்திய வணிக அடையாளங்களையும் காணும் வாய்ப்பும் இதில் பயணிப்பவர்களுக்கு கிடைக்கும்.

கட்டண விபரம்:

— பெட்ரோல் ஹெரிடேஜ் அப்ராவுக்கான அனைத்து வழிகளும் ஒரு பயணத்திற்கு 2 திர்ஹம் டிக்கெட் கட்டணமாகும். ஒவ்வொரு அப்ரா நிலையத்திலும் உள்ள டிக்கெட் அலுவலகத்திலிருந்து நீங்கள் டிக்கெட்டுகளை வாங்கலாம். மேலும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணிக்கலாம்.

— மேலும், படகு நிலையத்திலிருந்து டிக்கெட்டுகளை வாங்கினால், அனைத்து கடல் போக்குவரத்து நிலையங்களும் உங்கள் நோல், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை ஏற்காது, எனவே நீங்கள் பணமாக செலுத்த வேண்டியிருக்கும். எனவே, நீங்கள் முன்பதிவு செய்ய விரும்பினால் rta.ae என்ற இணையதளம் வழியாக உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்தலாம்.

வழித்தடங்கள் மற்றும் நேரங்கள்:

1. துபாய் ஓல்டு சூக் – பனியாஸ் (CR3)

துபாய் ஓல்டு சூக் மரைன் டிரான்ஸ்போர்ட் நிலையத்திலிருந்து, பர் துபாய் மீனா பஜார் அருகே உள்ள கிராண்ட் சூக்கில், பனியாஸ் சாலையில் (D85) அமைந்துள்ள பனியாஸ் மரைன் டிரான்ஸ்போர்ட்டிற்கு அப்ரா புறப்படுகிறது. தேரா மாவட்டத்தில் உள்ள பனியாஸ் பகுதி துபாய் க்ரீக்கின் முடிவில் மற்றும் துபாய் க்ரீக் கோல்ஃப் மற்றும் யாச்ட் கிளப் அருகே உள்ளது. மேலும், துபாய் நிலத் துறை (DLD) மற்றும் துபாய் சேம்பர் ஆஃப் காமர்ஸ் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்கள், பனியாஸ் மரைன் டிரான்ஸ்போர்ட் நிலையத்திற்கு அருகிலுள்ள சில முக்கிய அடையாளங்கள் ஆகும்.

நேரங்கள்: திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 7.30 முதல் இரவு 10.55 வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 முதல் இரவு 11.35 வரையிலும் அப்ரா சேவையை அணுகலாம்.

2. அல் ஃபஹிதி – அல் சப்கா (தேரா) (CR4)

அல் சீஃபின் முடிவில் அமைந்துள்ள அல் ஃபஹிதி அப்ரா நிலையம் அல் சீஃப் மற்றும் அல் ஃபஹிதி ஹிஸ்டோரிக்கள் ஏரியாவுக்கு இடையே உள்ளது. பனியாஸ் ஸ்கொயர் மெட்ரோ நிலையத்திற்கு அருகில் உள்ள அல் சப்கா மரைன் டிரான்ஸ்போர்ட் நிலையத்தில் பயணிகளை அப்ரா இறக்கி விடும்.

நேரங்கள்: திங்கள் முதல் சனிக்கிழமை வரை, காலை 8 முதல் இரவு 10.25 வரையிலும், ஞாயிறு மட்டும் காலை 10 முதல் இரவு 11.55 வரையிலும் பயணிகளுக்கு சேவை செய்யும்.

3. அல் ஃபஹிதி – தேரா ஓல்டு சூக் (CR5)

துபாய் முனிசிபாலிட்டி அருங்காட்சியகத்திற்கு அருகில் உள்ள அல் ஃபஹிதி அப்ரா நிலையத்திலிருந்து தேரா ஓல்டு சூக் அப்ரா நிலையம் வரை பயணிக்கலாம்.

நேரங்கள்: திங்கள் முதல் சனிக்கிழமை வரை: காலை 8 முதல் இரவு 10.25 வரை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 முதல் இரவு 11.55 வரை இயங்கும்.

4. அல் சீஃப் – பனியாஸ் (CR6)

அல் சீஃப் மாவட்டத்தில் அமைந்துள்ள அல் சீஃப் மரைன் டிரான்ஸ்போர்ட் நிலையத்திலிருந்து புறப்படும் அப்ரா பனியாஸ் மரைன் ட்ரான்ஸ்போர்ட் நிலையத்திற்கு செல்லும்.

நேரங்கள்: திங்கள் முதல் சனிக்கிழமை வரை: காலை 7.30 முதல் இரவு 10.50 வரை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 முதல் 12.20 வரையிலும் சேவையைப் பெறலாம்.

5. அல் சீஃப் – அல் ஃபஹிதி – துபாய் ஓல்டு சூக் (CR7)

இந்த வழித்தடங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை தவிர்த்து வார நாள்களில் அப்ரா செயல்படாது. அதிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4 முதல் இரவு 11.55 வரை மட்டுமே சேவையை அணுக முடியும். மேலும், ஒரு பயணத்தைத் தொடங்க குறைந்தபட்சம் ஆறு பயணிகள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டாரில் இயங்கும் பாரம்பரிய அப்ரா – 1 திர்ஹம்:

இந்த வகையான பாரம்பரிய அப்ராக்கள் மோட்டார் பொருத்தப்பட்டவை ஆகும். இந்த அப்ரா பயணிகளை அது செல்லும் இரண்டு வழித்தடங்களில் துபாயில் உள்ள இரண்டு பிரபலமான பாரம்பரிய சூக்குகளுக்கு அழைத்துச் செல்லும். ஒவ்வொரு பயணத்திற்கும் 1 திர்ஹம் செலவாகும். மேலும், இந்த பயணத்திற்கு நீங்கள் பணம் மட்டுமே செலுத்த முடியும்.

வழித்தடங்கள் மற்றும் நேரங்கள்:

முதல் வழித்தடம்: துபாய் ஓல்டு சூக் மற்றும் தேரா ஓல்டு சூக்கிற்கு அருகில் இருந்து பர் துபாய் மரைன் டிரான்ஸ்போர்ட் நிலையம் வரை.

நேரம்: தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரை

இரண்டாவது வழித்தடம்: பர் துபாய் மரைன் ட்ரான்ஸ்போர்ட் நிலையம் முதல் அல் சப்கா மரைன் ட்ரான்ஸ்போர்ட் நிலையம் வரை, பனியாஸ் சதுக்கத்திற்கு அருகில்.

நேரம்: 24 மணிநேரமும் செயல்படும்.

க்ரீக்கின் தனிப்பட்ட அப்ரா சுற்றுப்பயணத்தை பதிவு செய்தல்:

RTA இன் படி, ஒரு மணி நேரத்திற்கு 120 திர்ஹம்களுக்கு க்ரீக் முழுவதும் பயணம் செய்வதற்காக ஒரு அப்ராவை தனிப்பயண்பாட்டிற்காகவும் நீங்கள் பதிவு செய்யலாம். இந்த இணைப்பின் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்: https://marine.rta.ae/rta_b2c/opentickets.html அல்லது 800 9090 என்ற RTA அதிகாரப்பூர்வ கட்டணமில்லா எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!