அமீரக செய்திகள்

UAE: இன்று இரவு வண்ணமயமாக ஒளிரவிருக்கும் புர்ஜ் கலீஃபா மற்றும் ADNOC டவர்.. பாதுகாப்பு அமைச்சகம் ட்வீட்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் 47வது ஆயுதப்படைகள் ஒருங்கிணைப்பு தினத்தை முன்னிட்டு இன்று மே 6, சனிக்கிழமையன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டு முக்கிய அடையாளங்கள், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் ராணுவப் படையின் குறிப்பிடத்தக்க பங்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரே நேரத்தில் வண்ணமயமாக ஒளிரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆயுதப்படைகள் ஒருங்கிணைப்பு தினத்தை கொண்டாடும் விதமாக உலகின் மிக உயரமான கட்டிடம் புர்ஜ் கலீஃபா மற்றும் அபுதாபியில் உள்ள அட்நாக் (Adnoc) டவர் ஆகிய இரண்டு கட்டிடங்களிலும், இன்று மே 6 ஆம் தேதி இரவு 8.05 மணிக்கு லேசர் ஷோ காட்சிப்படுத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் (MoD) ட்வீட் செய்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தந்தை என்று அழைக்கப்படும், மறைந்த ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் மற்றும் எமிரேட்ஸ் ஆட்சியாளர்கள் ஒன்றாக இணைந்து, ஒரே கட்டளை மற்றும் ஒரே கொடியின் கீழ் ஆயுதப் படைகளை ஒருங்கிணைத்து, ஆயுதப்படைகளை நாட்டின் பாதுகாவலர்களாக மாற்றுவதற்கான வரலாற்று முடிவை மே 6,1976 அன்று எடுத்துள்ளனர். தற்போது அந்த தினமே ஆயுதப்படைகள் ஒருங்கிணைப்பு தினமாக அமீரகத்தில் கொண்டாடப்படுகிறது.

பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், கடந்த தசாப்தங்களாக ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆயுதப்படைகள் நவீன வளர்ச்சி மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம் இராணுவப் பயிற்சி செயல்திறனை அதிகரித்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், முக்கிய நிறுவனங்களின் சான்றிதழ்கள் மற்றும் அறிக்கைகளை கௌரவிப்பது உட்பட உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தொடக்க காலத்தில் மறைந்த ஷேக் கலீஃபா பின் சையத் அல் நஹ்யானின் தலைமையில், UAE ஆயுதப் படைகளின் தயார்நிலை தொடர்ந்து வலுவடைந்த நிலையில், தற்போது ஜனாதிபதி மாண்பு மிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளை கண்காணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!