அமீரக செய்திகள்

UAE: சுற்றுலா விசாவில் வந்து வீட்டு வேலை செய்யும் வெளிநாட்டவர்கள்!! – சேவை மையங்களை இழுத்து மூடிய அமைச்சகம்..

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சுமார் 84 வீட்டுப் பணியாளர்கள் சேவை மையங்களில், முறையாக உரிமம் பெறாமல் வீட்டுப் பணியாளர்களை பணியமர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அமைச்சகத்திற்கு வந்த புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்  தெரியவந்ததையடுத்து, அத்தகைய சேவை மையங்களை அதிகாரிகள் இழுத்து மூடியுள்ளனர்.

மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகத்திடம் தட்பீர் மையங்களுக்கு எதிராக வந்த 2,400 புகார்களை அடுத்து, சுமார் 270,000 ஆய்வு பிரச்சாரங்களை சமீபத்தில் அமைச்சகம் நடத்தியுள்ளது. இதில் முறையான உரிமம் பெறாமல் வீட்டுப் பணியாளர்களை பணியமர்த்தியது தொடர்பாக பிடிபட்ட சில சேவை மையங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்த தகவலை, ஃபெடரல் நேஷனல் கவுன்சிலின் (FNC) மத்திய மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சர் டாக்டர் அப்துல்ரஹ்மான் அல் அவார் அவர்கள் தெரிவித்துள்ளார். அத்துடன், அமீரகத்தில் சுற்றுலா விசாவில் வந்து வீட்டுப் பணியாளராகப் பணிபுரிவது குறித்து FNC உறுப்பினர் ஒருவர் கவலை தெரிவித்ததுடன், மேலும் இந்த விதிமீறல்கள் குறித்து அவர் டாக்டர் அல் அவாரிடம் கேள்வியும் எழுப்பியுள்ளார்.

அதேசமயம், தொழிலாளர்களை சுற்றுலா விசாவின் கீழ் கொண்டு வருவதற்கும், பின்னர் அவர்களின் நிலையை சரிசெய்வதற்கும் உள்நாட்டு தொழிலாளர் அலுவலகங்கள் பின்பற்றும் நடைமுறைகள் பற்றிய தெளிவின் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். கூடவே, ரெசிடென்சி அனுமதி ஆவணங்களை வழங்குவதற்கு தேவையான சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்யாமல், அத்தகைய நபர்கள் வீடுகளில் பணியமர்த்தப்படுவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுபோன்ற சூழ்நிலைகள் மையங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மற்றும் அபராதங்களை செயல்படுத்துவதற்கு வழிவகுக்கும் என அமைச்சகம் எச்சரித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை, கடந்த ஆண்டு டிசம்பரில் அமலுக்கு வந்த சட்டத்தின்படி, வேலை செய்ய உரிமம் பெற்ற வீட்டுப் பணியாளர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!