அமீரக செய்திகள்

துபாய்: பள்ளிக் குழந்தைகளுக்காக “ஸ்கூல் ரைடு” வசதியை அறிமுகம் செய்த Careem!! – பெற்றோர்கள் லைவ் டிராக்கிங் மூலம் கண்காணிக்கலாம்…

துபாயில் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் இப்போது Careem செயலியில் உள்ள ‘School Rides’ என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து, தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்கும், மீண்டும் வீடு திரும்புவதற்குமான சவாரிகளுக்கு முன்பதிவு செய்யலாம்.

சமீபத்தில் துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்துடன் (RTA) இணைந்து கரீம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய சேவை தற்போது துபாய் முழுவதும் உள்ளது. மேலும், இந்த சேவையில் ஒவ்வொரு சவாரியின் போதும் குழந்தைகளுடன் செல்ல விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சேர்த்து சவாரிகளை முன்பதிவு செய்யும் வசதி மற்றும் தினசரி ஒரே நேரத்தில் தொடர்ச்சியான சவாரிகளை முன்பதிவு செய்யும் திறன் உள்ளிட்ட புதிய அம்சங்கள் சேர்க்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் பெற்றோர்கள் மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும் 40 சவாரிகளின் தனிப்பயனாக்கப்பட்ட பேக்கேஜ்களை முன்பதிவு செய்யலாம். குறிப்பாக, வேலை அட்டவணைகள், விடுமுறைகள் மற்றும் வார இறுதிகளில் கூடுதல் நெகிழ்வுத்தன்மையுடன் பெறலாம்.

அதேசமயம், இந்த ஸ்பெஷல் ரைடுக்கான பேக்கேஜ் கட்டணங்கள் மலிவானவை என்றும், வாடிக்கையாளர்கள் வழக்கமான முன்பதிவுகளுடன் ஒப்பிடும்போது இதில் 40 சதவீதம் வரை சேமிக்க முடியும் என்றும் கரீம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தங்களின் குழந்தைகளின் வசதிக்காக Lexus, Toyota மற்றும் Infiniti போன்ற பல பிரீமியம் கார்களையும் இதில் தேர்வு செய்யலாம். அதிலும் குறிப்பாக, ஒவ்வொரு பள்ளி சவாரியின் போதும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பராமரிப்பதற்கும் பயிற்சி பெற்ற ஓட்டுநர்களே நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பு மற்றும் பின்னணி சோதனைகளுக்கு உட்பட்டவர்கள் என்றும் கரீம் செய்தி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளது.

மேலும், கரீம் செயலியில் உள்ள லைவ் ட்ராக்கிங் அம்சத்தின் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பயணத்தைக் கண்காணிக்க முடியும் எனவும், இறுதியாக அவர்களின் குழந்தைள் பாதுகாப்பாக பள்ளியில் இறக்கிவிடப்பட்டதும் பொற்றோருக்கு அறிவிக்கப்படும் என்றும் கரீம் கூறியுள்ளது.

இது குறித்து GCC-யின் Careem நிறுவனத்தின் GM அந்தோனியோ அலஸ்மார் என்பவர் பேசுகையில், கரீமின் புதிய ஸ்கூல் ரைட்ஸ் சேவை துபாயில் உள்ள பெற்றோருக்கு வசதியான, பாதுகாப்பான மற்றும் மலிவு விலையில் பள்ளி போக்குவரத்து விருப்பத்தை வழங்குவதாகவும், மக்களின் வாழ்க்கையை எளிமைப்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!