அமீரக செய்திகள்

துபாய்: மூன்றே மாதங்களில் 4.67 மில்லியன் சுற்றுலாவாசிகள் வருகை..!! 17% அதிகரிப்பு என பொருளாதார மற்றும் சுற்றுலாத்துறை தகவல்..!!

துபாய் இந்தாண்டின் முதல் காலாண்டில் சுமார் 4.67 மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச பார்வையாளர்களை வரவேற்றுள்ளதாக தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 17 சதவீதம் அதிகரித்துள்ளது என துபாயின் பொருளாதார மற்றும் சுற்றுலா துறை மூலம் தகவல் தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து, துபாயின் பட்டத்து இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் ட்விட்டரில், பயணிகளின் எண்ணிக்கை உயர்வின் மூலம், உலகளாவிய சுற்றுலாத் துறையின் மீட்சியில் துபாய் முன்னணியில் உள்ளது என்பதை உறுதிப்படுத்தியதாகக் கூறியுள்ளார். இந்த எண்ணிக்கை உயர்வானது, D33 அஜென்டாவின் முன்னோக்கிச் சிந்திக்கும் உத்தியை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதற்கான சான்றாகும் என்றும் ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றி வெளியான தகவல்களின்படி, அடுத்த தசாப்தத்தில் துபாய் எமிரேட்டின் பொருளாதாரத்தினை இரட்டிப்பாக்குவதற்கும், முதல் மூன்று உலக நகரங்களில் அதன் நிலையை உறுதிப்படுத்துவதற்கும் லட்சிய இலக்குகளை D33 அஜென்டா அல்லது துபாய் பொருளாதாரத்திற்கான அஜென்டா நிர்ணயித்துள்ளது.

ஷேக் ஹம்தான் மேலும் கூறுகையில், “துபாயை உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெருநகரங்களில் ஒன்றாகவும், பயணம், திறமை, தொழில்முனைவு மற்றும் முதலீட்டிற்கான உலகின் தலைசிறந்த மையமாகவும் மாற்றும் தலைமையின் தொலைநோக்குப் பார்வையால் இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது”.

“சுற்றுலாத் துறையானது நமது பொருளாதாரத்தின் வலுவான தூண்கள் மட்டுமல்ல, சந்தைகள், கலாச்சாரங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கு இடையே ஒரு பாலமாக உலகில் துபாயின் தனித்துவமான பங்கை செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வரும் ஆண்டுகளில், துபாய் பயணிகளுக்கு ஒரு தனித்துவமான முன்மொழிவை வழங்குவதற்கும், வாழவும், பார்வையிடவும், வேலை செய்யவும் மற்றும் முதலீடு செய்யவும் உலகின் சிறந்த இடமாக மாறுவதற்கான அதன் இலக்கை அடைய புதிய வழித்தோன்றல் முயற்சிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் துபாய் 2021இல் வரவேற்ற பயணிகளின் எண்ணிக்கையை விட 2022 இல் வரவேற்ற சர்வதேச சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளது. இது குறித்த புள்ளிவிவரங்களின் படி, துபாய் 2021 இல் 7.28 மில்லியன் சுற்றுலாவாசிகளையும் 2022 இல் 14.36 மில்லியன் சுற்றுலாவாசிகளையும், பதிவு செய்து 97 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!