அமீரக செய்திகள்

துபாயில் பயண நேரத்தை 60 சதவீதம் வரை குறைக்கும் புதிய சாலை திட்டம் அறிவிப்பு!! – RTA வின் விறுவிறு சாலை பணிகள்…

துபாயின் பல்வேறு பகுதிகளில் சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வரும் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தற்போது, துபாயின் கிழக்கு பகுதியில் உள்ள அல் குசைஸ் தொழில்துறை பகுதிகளில் பயண நேரத்தை 60 சதவீதம் வரை குறைக்கும் புதிய சாலை திட்டம் ஒன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல்.30) அறிவித்துள்ளது. அதன்படி அல் குசைஸின் தொழில்துறை பகுதிகளான 1, 2, 3, 4 மற்றும் 5 இல் உட்புற சாலைகள் மற்றும் தெருவிளக்குகள் பணிகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்தையும் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வழங்கியுள்ளது.

இத்திட்டத்தின் மூலம், அல் குசைஸ் தொழில்துறை பகுதி சாலையின் இருதிசைகளிலும் ஒரு மணி நேரத்திற்கு 500 முதல் 1,500 வாகனங்கள் வரை செல்லலாம். இந்த திட்டம் முடிவடையும் பட்சத்தில், இது சாலையின் போக்குவரத்துத் திறனை 200 சதவிகிதம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பகுதியில் உள்ள 10 கிமீ நீளமுள்ள 32 சாலைகளில் 43 கிமீ தொலைவிற்கு தெருவிளக்குகளும் அமைக்கப்பட உள்ளதாக RTA அறிவித்துள்ளது. அத்துடன் இந்த புதிய சாலைகள் அமைக்கப்படும் திட்டத்தின் வரைபடத்தையும் RTA வெளியிட்டுள்ளது.

இது குறித்து RTA-வின் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் இயக்குநர் ஜெனரலும், தலைவருமான மத்தார் அல் டேயர் கூறுகையில், இத்திட்டம் அல் குசைஸ் தொழில்துறை பகுதிகளை இணைப்பதை மேம்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, அம்மான், பெய்ரூட், ஹலாப் மற்றும் டமாஸ்கஸ் ஸ்ட்ரீட் ஆகியவற்றை இணைப்பதன் மூலம் 320 ஒர்க் ஷாப்புகள், 25 குடியிருப்பு கட்டிடங்கள், கடைகள் மற்றும் கல்வி மண்டலங்களுக்கான நுழைவாயில்கள் மற்றும் வெளியேறும் வழிகள் மேம்படுத்தப்படும். இதனால் அப்பகுதியில் வசிக்கும் 60,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பலனடைவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

துபாயில் நடைபெறும் மற்ற சாலை பணிகள்:

RTA தற்போது லெஹ்பாப், மார்காம், அல் லிசைலி மற்றும் ஹத்தா ஆகிய நான்கு குடியிருப்புப் பகுதிகளில் மொத்தம் சுமார் 37 கி.மீ. தொலைவிற்கு உள் சாலைகள் மற்றும் விளக்குகள் அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மார்காம் உட்புற சாலைகள் திட்டம் சுமார் 1,100க்கும் மேற்பட்டோருக்குச் சேவை செய்யும் வகையில், ஸ்கைடைவ் துபாய்க்கு அருகில் உள்ள துபாய் – அல் அய்ன் சாலையில் 8 கிமீ நீளமுள்ள தெருக்களை மேம்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

அதுபோல, லெஹ்பாப்பில், RTA ஆனது மழைநீர் வடிகால் மற்றும் தெருவிளக்குகளை உள்ளடக்கிய வேலைகளுடன் 4கிமீ சாலைகளை அமைத்து வருவதாகவும், இதனால் 3,000 குடியிருப்பாளர்கள் பயனடைவதுடன் கட்டுமானத்தில் இருக்கும் குடியிருப்பு பகுதியை சாலை நெட்வொர்க்குடன் இது இனணக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அல் லிசைலியில் 7 கிமீ நீளத்திற்கு சாலைகள் அமைக்கப்படுவதுடன் லாஸ்ட் எக்சிட் மற்றும் அல் குத்ரா ஏரிக்கு அருகிலுள்ள சைஹ் அஸ்ஸலாமில் 14 கிமீ நீளமுள்ள தற்போதைய சாலைகளுக்கான தெருவிளக்கு பணிகளும் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இது கிட்டத்தட்ட 2,900 குடியிருப்பாளர்களுக்கு சேவை செய்யும். மேலும், அப்பகுதியில் உள்ள நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களை இது மேம்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போன்று ஹத்தாவில், சயீர், அல் சலாமி மற்றும் சுஹைலாவில் 2 கிமீ நீளமுள்ள சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த திட்டம் சுமார் 6,000 குடியிருப்பாளர்களுக்கு சேவை செய்வதுடன் சாலை நெட்வொர்க்குடன் கட்டுமானத்தில் உள்ள குடியிருப்பு சமூகத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களை இது மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!