அமீரக செய்திகள்

துபாயில் ஆடம்பர வாழ்க்கை வசதிகளுடன் கட்டப்படவிருக்கும் உலகின் மிகப்பெரிய குடியிருப்புக் கட்டிடம்!!

துபாயில் ஆடம்பர வாழ்க்கை வசதிகளுடன் கூடிய உலகிலேயே மிகப்பெரிய குடியிருப்புக் கட்டிடத்தை கட்டுவதாக துபாயின் அல் ஹப்தூர் குழுமம் அறிவித்துள்ளது. மேலும் ஹப்தூர் டவர் (Habtoor Tower) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மிகப்பெரிய புதுமையான கட்டிடம், ஷேக் சையத் சாலையில், துபாய் வாட்டர் கேனல் (Dubai Water Canal) கரையோரத்தில், புர்ஜ் கலீஃபா மற்றும் துபாய் சர்வதேச நிதி மையத்திற்கு அருகில் அமைந்துள்ள அல் ஹப்தூர் சிட்டியில் கட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் மிகப்பெரிய மற்றும் பல உயரமான அடுக்குமாடி கட்டிடங்களை கொண்டிருக்கும் பிசினஸ் பே (Business Bay) பகுதியில் அமைந்திருக்கும் இந்த அல் ஹப்தூர் சிட்டியானது, 2016 ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. தற்பொது இந்த சிட்டியில் கட்டிடத்தின் பரப்பளவில் உலகிலேயே மிகப்பெரியதாக ஹப்தூர் டவர் கட்டப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை புர்ஜ் அல் அரப், துபாய் சர்வதேச விமான நிலைய டெர்மினல்கள் 1 மற்றும் 3, அபுதாபியின் ஆபிசர்ஸ் கிளப் மற்றும் பல திட்டங்களில் இருந்து பல தசாப்தங்களாக பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், புதுமையான மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுமான நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த குடியிருப்பு கட்டிடம் கட்டப்படும் என்று அல் ஹப்தூர் குழுமம் தெரிவித்துள்ளது.

இந்த பிரம்மிக்க வைக்கும் கட்டிடம் குறித்து அல் ஹப்தூர் குழுமத்தின் நிறுவனத் தலைவர் கலாஃப் அல் ஹப்தூர் அவர்கள் பேசுகையில், இந்த ஹப்தூர் கட்டிடம் மிக உயர்ந்த தரத்தில் வழங்கப்படும் என்பதில் பெருமிதம் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “முன்னாள் பில்டர்/காண்டிராக்டர் என்ற முறையில், கட்டுமானத் தொழில்நுட்பத்தின் சில புதுமையான விவரங்களை வெளிப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சுமார் 3,517,313 (35 லட்சம்) சதுர அடி மற்றும் நிலத்திற்கு மேல் 81 தளங்கள் கொண்ட இந்த கட்டிடம் 1,701 இருப்பிடங்களை கொண்டிருக்கும் எனவும், இத்திட்டத்தை 36 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த உயர்ந்த கட்டிடம் தனித்துவமானது மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கும் ஒரு கற்றல் அமைப்பாக இருக்கும் என்று கூறிய அவர், நாங்கள் தொடங்கும் இந்த சிறப்பான கட்டிடத்தை மிஞ்சும் வகையில், மற்றொன்றை வழங்க பொறியாளர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்களுக்கு இதன் மூலம் சவால் விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!