அமீரக செய்திகள்

UAE: உயர் இரத்த அழுத்தத்தை முன்கூட்டியே கண்டறிய இலவச சுகாதார பரிசோதனைகள்!! – நாடு முழுவதும் 50,000 பேரை பரிசோதிக்க திட்டம்..

ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதாரம் மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) உயர் இரத்த அழுத்தத்தை முன்கூட்டியே கண்டறிவதற்கான தேசிய பிரச்சாரத்தை நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. அதனடிப்படையில் இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெறும் இந்த பிரச்சாரத்தில், சுமார் 50,000 நபர்களை பரிசோதிக்கவும் அமைச்சகத்தால் திட்டமிடப்பட்டுள்ளது.

நோய்களின் தாக்கத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த பிரச்சாரத்தின் மற்றொரு நோக்கம் இரத்த அழுத்தத்தை பரிசோதித்தல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுதல் மற்றும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதன் சிக்கல்களுக்கு பங்களிக்கும் காரணிகளைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவம் குறித்து சமூகத்தில் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவை எனவும் அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களுக்கு முற்றிலும் இலவசமாக இரத்த அழுத்த பரிசோதனை சேவைகளை வழங்கும் இந்த பிரச்சாரத்தில், கூடுதலாக அடிப்படை மக்கள்தொகை, மருத்துவ தகவல்கள் மற்றும் இரத்த அழுத்த அளவீடுகள் போன்ற விவரங்களும் செவிலியர்கள், பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் மற்றும் நாட்டில் உள்ள மருந்தகங்களின் நெட்வொர்க் மூலம் சேகரிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது

இது குறித்து பொது சுகாதாரத் துறையின் உதவி துணைச் செயலர் டாக்டர் ஹுசைன் அப்துல் ரஹ்மான் அல் ராண்ட் என்பவர் கூறுகையில், ஐக்கிய அரபு அமீரகம் 2030ஆம் ஆண்டுக்குள் உயர் ரத்த அழுத்த விகிதத்தை 30 சதவீதம் குறைக்கும் இலக்கைக் கொண்டுள்ளதாகவும், நோய் வந்த பின்னர் அளிக்கப்படும் சிகிச்சையை விட நோய் வருவதற்கு முன்பே கண்டறிந்து, அதனை தடுப்பதன் மூலம் இந்த இலக்கை விரைவில் அடைய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து பேசிய தொற்றாத நோய்த் துறையின் (Non communicable disease department) தலைவர் டாக்டர் புதைனா அப்துல்லா பின் பாலிலா என்பவர், இந்த பிரச்சாரம் நாட்டில் பொது சுகாதாரத்தை மேம்படுத்தவும், தடுப்பு மற்றும் சுகாதார கடமைகளை வலுப்படுத்தவும் உதவும் எனவும் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!