அமீரக செய்திகள்

ஹஜ் யாத்ரீகர்களை வரவேற்க தயார் நிலையில் சவூதி.. தடுப்பூசி போடுவது அவசியம்.. இதுவரை ஹஜ் செய்யாத முஸ்லிம்களுக்கு முன்னுரிமை..

சவுதி அரேபியாவிற்கு ஹஜ் எனப்படும் புனிதப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு யாத்ரீகர்களை ஜெத்தா, மதீனா, ரியாத், தம்மாம், தைஃப் மற்றும் யான்பு ஆகிய ஆறு விமான நிலையங்களில் வரவேற்க சவூதி அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, சவூதியின் விமான நிறுவனமான சவுதியா ஏர்லைன்ஸ், உலகளவில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து யாத்ரீகர்களை ஏற்றிச் செல்ல தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதற்கேற்ப, புனிதப்பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு தடையற்ற பயணத்தை வழங்கும் பொருட்டு சவுதியா ஏர்லைன்ஸ் 176 விமானங்களைப் பயன்படுத்தவும், 1.2 மில்லியன் இருக்கைகளை ஒதுக்கவும் திட்டமிட்டுள்ளது.

மேலும், 42 மொழிகளில் சரளமாக பேசக்கூடிய 8,000 கேபின் க்ரூ உறுப்பினர்களை பணியமர்த்துவதுடன் 14 மொழிகளில் ஹஜ் மற்றும் உம்ரா செய்வது குறித்த இ-புத்தகங்களை யாத்ரீகர்களுக்கு வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. கூடுதலாக, விமானத்தில் இஸ்லாமிய உள்ளடக்கம் நிறைந்த மத நிகழ்ச்சிகள், குர்ஆன் ஓதுதல்கள் மற்றும் பல மொழிகளில் உள்ள பிற இஸ்லாமிய நிகழ்ச்சிகளும் யாத்ரீகர்களுக்காக சவூதியா ஏர்லைன்ஸில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த ஆண்டு ஹஜ்ஜில் பங்கேற்கும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு யாத்ரீகர்கள் கட்டாயம் கோவிட்-19 க்கு எதிராக முழு தடுப்பூசி போடுமாறு சவுதி அரேபியாவின் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக, மூளைக்காய்ச்சல் எதிர்ப்பு தடுப்பூசி மற்றும் பருவகால காய்ச்சல் தடுப்பூசி போன்றவற்றை ராஜ்யத்தின் சுகாதார அமைச்சகம் மேற்கோள் காட்டியுள்ளது.

ஆகவே, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான புனித யாத்திரையை உறுதி செய்வதற்காக உள்நாட்டு யாத்ரீகர்கள் “Sehaty” செயலி மூலம் தடுப்பூசிகளுக்கான நியமனங்களை முன்பதிவு செய்வது அவசியம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஜூன் மாத இறுதியில் ஹஜ் யாத்திரை தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பு வரை தடுப்பூசிகள் கிடைக்கும் என தெரிகிறது.

அதுபோல, வெளிநாட்டு யாத்ரீகர்கள் சவுதிக்கு புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு முன்பு, தங்கள் சொந்த நாடுகளில் கட்டாய தடுப்பூசிகளைப் பெறலாம். அவர்கள் மஞ்சள் காய்ச்சல் மற்றும் போலியோ வைரஸ் மற்றும் கோவிட்-19 போன்றவற்றிற்கு எதிரான தடுப்பூசிகளை பெற்றிருப்பது அவசியம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை செய்வதற்கான குறைந்தபட்ச வயது 12 என்றும், இதற்கு முன்பு யாத்திரையை மேற்கொள்ளாத முஸ்லிம்கள் புனித யாத்திரையை மேற்கொள்வதற்காக பதிவு செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் சவுதி ஹஜ் அமைச்சகம் கூறியுள்ளது.

தொற்றுநோய்க்கு முந்தைய காலங்களில் ஆண்டுதோறும் சுமார் 2.5 மில்லியன் முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரையில் கலந்து கொண்டனர். ஆனால், கடந்த ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக, ஹஜ் சடங்குகளைச் செய்ய அனுமதிக்கப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கையை சவுதி அரேபியா குறைத்திருந்த நிலையில், இந்த ஆண்டு உலகம் முழுவதிலுமிருந்து வரும் யாத்ரீகர்களின் எண்ணிக்கையில் வரம்புகள் இருக்காது என்று ராஜ்ஜியம் தெரிவித்துள்ளது.

ஹஜ் பயணம் என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் முஸ்லிம்களுக்கு விதிக்கப்பட்ட ஐந்து கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். அதன்படி இஸ்லாமியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது ஹஜ் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!