ADVERTISEMENT

UAE: கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குளிராக இருந்த ஏப்ரல் மாதம்.. NCM அறிவிப்பு!

Published: 25 May 2023, 7:04 PM |
Updated: 26 May 2023, 5:56 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தாண்டு ஏப்ரல் மாதம் குளிராக இருந்ததாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) செய்தி ஊடகங்களிடம் உறுதி செய்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த ஆண்டுகளின் இதே காலட்டத்தில் ஒப்பிடுகையில், இந்தாண்டின் ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் மிதமான காற்றின் நிறை காரணமாக, மிகக் குறைவான அதிகபட்ச வெப்பநிலையையே பதிவு செய்துள்ளது. அதாவது, 25.8°C என்பது இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் சராசரி வெப்பநிலையாகும், இது முந்தைய வருடங்களை விட  2.3 டிகிரி செல்சியஸ் குறைவாக உள்ளது.

இது குறித்து NCM கூறியதாவது: “அமீரகத்தில் கடந்த 24 ஆண்டு கால வெப்பநிலையை ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிட்டுப் பார்த்த போது, (2023) ஏப்ரல் மாதம் மிகக் குறைந்தபட்ச வெப்பநிலையை அனுபவித்துள்ளோம்” என்று கூறியுள்ளது.

ADVERTISEMENT

மேலும், வடமேற்கு, மத்திய தரைக்கடல் மற்றும் சவூதி அரேபியாவின் வடக்கில் இருந்து அமீரகத்தை நோக்கி வரும் காற்றழுத்த அமைப்பால் நாடு பாதிக்கப்பட்டதாகவும் NCM கூறியுள்ளது. எனவே, குளிர்ந்த பகுதிகளில் இருந்து அமீரகத்தை நோக்கி வரும் காற்று ஏப்ரல் மாதத்தில் ஒப்பீட்டளவில் அப்பகுதியை குளிர்விப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது, மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் நாட்டின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்த போதிலும், வெப்பநிலையில் எந்தச் சரிவும் இல்லை. முன்னதாக அல் தஃப்ரா பிராந்தியத்தில் மிர்ஃபா, அல் சிலாவில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய பலத்த மழை பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

அப்போதைய சூழலில், NCM சில பிராந்தியங்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகளை வெளியிட்டு, அபாயகரமான நிலைமைகள் குறித்து பொதுமக்களை எச்சரித்ததும் குறிப்பிடத்தக்கது.