ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் இன்று (வியாழக்கிழமை) பலத்த காற்றுடன் தூசி நிறைந்த சூழலும், பகல் நேரத்தில் ஓரளவு மேக மூட்டத்துடனும் இருக்கும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அறிவித்துள்ளது. மேலும், தூசி நிறைந்த சூழல் காரணமாக மஞ்சள் எச்சரிக்கையையும் NCM வெளியிட்டுள்ளது.
அமீரகத்தின் தேசிய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, இன்றிரவு காற்று மீண்டும் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக, வெள்ளிக்கிழமை காலை கடலில், மணிக்கு 15-30 கிமீ வேகத்தில், சில சமயங்களில் மணிக்கு 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அரேபிய வளைகுடாவில் கடல் மிகவும் கொந்தளிப்புடனும், ஓமான் கடலில் மிதமான வேகத்துடனும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரைகளில் பலத்த காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடலுக்கு மேல் தூசி மற்றும் மணலுடன் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இது அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கிடைமட்ட தெரிவுநிலையை (visibility) குறைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆகவே, வாகன ஓட்டிகள் சாலையில் கவனமாக செல்வதும், ஏற்கனவே அலர்ஜியால் அவதிப்படுபவர்களும் வெளியில் செல்லும்போது முன்னெச்சரிக்கையாக இருப்பதும் அவசியம் என NCM அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், ராஸ் அல் கைமா மற்றும் ஃபுஜைரா போன்ற வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மூடுபனி உருவாகும் என்பதால் இன்றிரவு மற்றும் வெள்ளிக்கிழமை காலை ஈரப்பதம் மிக அதிகமாக இருக்கும் என்றும், அதிகபட்ச ஈரப்பதம் 85 சதவீதத்தை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
துபாயில் தற்போது 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ள நிலையில், அதிகபட்சம் 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம் என்றும் அமீரக தேசிய வானிலை மையம் அறிவித்துள்ளது.