அமீரக செய்திகள்

துபாயில் 10 கிமீ தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள ‘புதிய மலையேறும் பாதை’..!- ஜூன் 20 முதல் பயண்பாட்டிற்கு வரும் என தகவல்..!!

துபாயில் மலையேறுவதில் ஆர்வம் கொண்ட குடியிருப்பாளர்களுக்காக 10 கிமீ தொலைவிற்கு புதிய ஹைகிங் பாதை ஒன்று, மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு பூங்காக்களில் ஒன்றான முஷ்ரிஃப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளதாக துபாய் முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது. மேலும் மலையேறுபவர்களும், பார்வையாளர்களும் மலைப் பாதையில் பாதுகாப்பாக செல்ல ஆங்காங்கே மரத்தினால் செய்யப்பட்ட படிக்கட்டுகள் மற்றும் பாலங்களும் இந்த பாதையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் துபாய் முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது.

10 கிமீ தூரம் உள்ள இந்த மலைப் பாதை எதிர்வரும் ஜூன் 20 முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்றும், இதனை பார்வையாளர்கள் இலவசமாக அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், முஷ்ரிப் பூங்காவிற்குள் நுழைவதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி ஒரு காருக்கு 10 திர்ஹமும், ஒரு நபருக்கு 3 திர்ஹமும் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுவதாக துபாய் முனிசிபாலிட்டியின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இங்கு மலையேறுபவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குவதற்காக எளிதாக மலையேறக்கூடிய வகையில் பொழுது போக்கு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள 8.3 கிமீ பாதை மஞ்சள் நிறத்திலும், உடற்பயிற்சி மற்றும் வலிமை கொண்ட திறமையான விளையாட்டு வீரர்களுக்கான 1.4 கிமீ பாதை ஆரஞ்சு நிறத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து துபாய் முனிசிபாலிட்டியின் கீழ் உள்ள பொது பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் துறையின் இயக்குனர் அகமது அல் ஜரூனி என்பவர் கூறுகையில், இந்த மலைப் பாதையில், பல்வேறு சிற்பங்கள், மர படிக்கட்டுகள் மற்றும் பாலங்கள், சரிவுகள் மற்றும் ஓய்வு பகுதிகளும் இடம்பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார்.

மலையேறுபவர்களின் பாதுகாப்பு:

இவற்றுடன் மலைப்பாதைகளில் செல்லும்போது மலையேறுபவர்கள் பின்பற்ற வேண்டிய பல்வேறு வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன. அதாவது, மலையேறுவதற்குத் தேவையான குடிநீரை எடுத்துச் செல்வதையும், தகவல்தொடர்பு முறைகள் இருப்பதையும், சரியான உடைகள், காலணிகள் மற்றும் பாதுகாப்புக் கருவிகளை அணிந்துகொள்வதையும் உறுதி செய்வது இந்த வழிகாட்டுதல்களில் அடங்கும்.

அதுமட்டுமின்றி, 12 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாதைகளைப் பயன்படுத்த வேண்டுமெனில் அவர்களுடன் கூடுதலாக ஒரு பெரியவர் வந்தால் மட்டுமே அனுமதி உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையேறுபவர்களின் பாதுகாப்பு குடிமை அமைப்பிற்கு மிகவும் முக்கியமானது என்று கூறிய அல் ஜரூனி, அவர்களுக்கு உதவவும், அவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கவும், நிர்வாக மற்றும் மேற்பார்வை ஊழியர்களும் பாதையில் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கூடுதலாக, பொதுக் கழிவறைகள், பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களுடன் கூடிய எச்சரிக்கை பலகைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும், சேவைகளையும் பூங்காவில் சேர்க்க முனிசிபாலிட்டி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நடைபயணம் மேற்கொள்பவர்கள் முஷ்ரிஃப் பூங்காவில் உள்ள மலை பாதையை பாதுகாப்பாக கடந்து செல்வதையும், பாதையின் எதிர் திசையில் அல்லாமல் பாதையின் திசையிலேயே செல்வதையும் உறுதிசெய்யும் வழிமுறைகளையும், அறிவுறுத்தல்களையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் முனிசிபாலிட்டி அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.

அதேசமயம், ஹைக்கர்கள் மலைப்பாதையின் சரியான அளவைத் தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் ஆரஞ்சு நிறப் பாதையானது அதிக அளவிலான உடற்பயிற்சி மற்றும் வலிமை கொண்ட திறமையான விளையாட்டு வீரர்களுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மலையேற்றம் முடிந்த பிறகு காட்டில் இரவில் தங்குவது, சமைப்பது, புகைபிடிப்பது, முகாமிடுவது, தீ வைப்பது போன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் துபாய் முனிசிபாலிட்டி பார்வையாளர்களுக்கு வலியுறுத்தியுள்ளது.

முஷ்ரிப் பூங்கா பற்றிய சில தகவல்கள்:

துபாயில் அல் கவானீஜ் ஸ்ட்ரீட்டில் அமைந்துள்ள பிரபல முஷ்ரிப் பூங்கா 1974 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நாட்டின் பழமையான பூங்காக்களில் ஒன்றாகும். இது சைக்கிள் ஓட்டும் தடங்கள், பார்பிக்யூ பிரியர்களுக்காகவே ஒதுக்கப்பட்ட பிரத்யேக பகுதிகள் மற்றும் மூடப்பட்ட நீச்சல் குளம் ஆகிய வசதிகளுடன் ஐக்கிய அரபு அமீரக மக்களிடையே மிகவும் பிரபலமானது.

அத்தகைய பழமையான பூங்கா பல ஆண்டுகளாக பல வளர்ச்சி நிலைகளைக் கடந்துள்ளது. குறிப்பாக, இங்கு Al Thuraya Astronomy Center மற்றும் Mushrif Equestrian Club ஆகியவை அமைந்துள்ளன, மேலும் குதிரை சவாரி, சாகசப் பாதைகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளையும் இங்கே வரும் பார்வையாளர்கள் அனுபவிக்கலாம். அத்துடன், 2021 ஆம் ஆண்டில் மொத்தம் 50 கிமீ நீளமுள்ள சைக்கிள் ஓட்டுதல் தடங்களை துபாய் முனிசிபாலிட்டி இந்த பூங்காவில் அறிமுகப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!