அமீரக செய்திகள்

துபாயை மெருகேற்றும் பணியில் 3,000 துப்புரவுப் பணியாளர்கள்..!! ஈத் அல் அதாவை முன்னிட்டு துபாய் முனிசிபாலிட்டி நியமித்துள்ள குழு…

ஈத் அல் அதா பண்டிகையின் போது, துபாயின் அழகியல் தோற்றத்தை மேலும் மெருகேற்றி ரம்மியமாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க நகரம் முழுவதும் 3,000 க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று துபாய் முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது.

இது குறித்து நகராட்சியின் கழிவு செயல்பாட்டுத் துறையின் செயல் இயக்குனர் பொறியாளர் சையது அப்துல் ரஹீம் சஃபர் என்பவர் கூறுகையில், நகரத்தின் அனைத்து தெருக்கள், பொது இடங்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் கடற்கரைகள் ஆகியவற்றின் தூய்மையைப் பாதுகாக்க முனிசிபாலிட்டியின் அனைத்து களக் குழுவினரும் விழிப்புடன் வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம், எதிர்பாராத சம்பவங்கள் ஏதேனும் ஏற்பட்டால் விரைந்து நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்வதற்காக அனைத்து அவசரகால வழக்குகளுக்கும் தேவையான செயல்பாட்டுத் திட்டங்களை முனிசிபாலிட்டி தயார் செய்துள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும், நகரில் பொது சுகாதார மையங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் போது, ​​வழக்கமான கள ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், 24 மணி நேரமும் அவசரநிலைகளில் கலந்துகொள்வதற்கும் மொத்தம் 747 இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக சிவில் அமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போது, அமீரகத்தில் மதிய நேர வேலை தடை செய்யப்பட்டுள்ளதால், ஈத் அல் அதாவின் முதல் நாட்களில் பணிகளை விரைவாகவும் திறமையாகவும் முடிப்பதற்காக, குழுக்கள் நான்கு ஷிஃப்டுகளாக வேலையில் ஈடுபடும் என்றும் கூறப்படுகிறது.

சுமார் 250 மேற்பார்வையாளர்களின் மேற்பார்வையின் கீழ் முனிசிபாலிட்டியின் 2,320 துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த 426 பணியாளர்கள் எமிரேட்டின் ஒவ்வொரு மூலையையும் தூய்மைப் படுத்தும் பணியில் களமிறங்குவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, கழிவு மேலாண்மையின் ஒரு பகுதியாக அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் 45 கூடுதல் குப்பைத்தொட்டிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, எமிரேட்டை தூய்மைப்படுத்தும் திட்டத்தில் முனிசிபாலிட்டியுடன் ஒப்பந்தம் செய்துள்ள தனியார் துறை நிறுவனங்கள், கழிவுகளை சுத்தம் செய்தல், கொண்டு செல்லுதல், பிரித்தல் மற்றும் மறுசுழற்சி செய்தல், கைவிடப்பட்ட வாகனங்களை நகர்த்துதல் மற்றும் பொது சுகாதார வசதிகளை சுத்தம் செய்தல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஈத் அல் அதாவை முன்னிட்டு துபாயில் உள்ள 10 தொழுகை பகுதிகளும் சுத்தம் செய்து முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், துபாயின் நிலப்பரப்பு மட்டுமின்றி, கடற்கரை மற்றும் நீர் கால்வாய்களின் தூய்மையை கண்காணிப்பதற்கும் ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!