ADVERTISEMENT

நாள் ஒன்றுக்கு அரை பில்லியன் கேலன் நல்ல தண்ணீரை உற்பத்தி செய்யும் துபாய்..!! நீரின் உற்பத்தித்திறன் அதிகரித்துள்ளதாக ஆணையம் தகவல்…!!

Published: 7 Jun 2023, 9:52 AM |
Updated: 7 Jun 2023, 12:43 PM |
Posted By: Menaka

அமீரகத்தில் பொதுவாக கடல் நீரானது சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் துபாயில் மட்டும் தினசரி உப்பு நீக்கப்பட்ட நீரின் (desalinated water) உற்பத்தித் திறன் கிட்டத்தட்ட அரை பில்லியன் கேலன்களை எட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது. துபாயில் பெருகி வரும் மக்கள் தொகையினால் நல்ல தண்ணீரின் தேவையும் நாளுக்க நாள் உயர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

குடியிருப்பாளர்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த ஆண்டு துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையம் (DEWA) சுமார் 64 கிமீ வரை நீர் கடத்தும் குழாய் நெட்வொர்க்கை நீட்டித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நீட்டிப்பு பணிக்கு சுமார் 358 மில்லியன் திர்ஹம்கள் செலவாகியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

எனவே, தற்போதைய தேவையின் அடிப்படையில், உப்பு நீக்கப்பட்ட நீரின் மொத்த உற்பத்தித்திறன் துபாயில் ஒரு நாளைக்கு 490 மில்லியன் கேலன்களை (imperial gallons) எட்டியுள்ளதாக DEWA தெரிவித்துள்ளது. இது குறித்து ஆணையத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாகியுமான சையத் அல் தாயர் என்பவர் கூறுகையில், துபாய் குடியிருப்பாளர்களுக்கு மிக உயர்ந்த தரத்தை வழங்குவதற்கும், வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்கும், நீர் இருப்புகளை அதிகரிப்பதற்கும் ஆணையம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் துபாய் எமிரேட்டில் தண்ணீர், மின்சாரம் மற்றும் குளிரூட்டும் சேவைகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், ஆணையத்தின் நிகர லாபம் 1.25 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துபாய் நிதிச் சந்தைக்கு ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையின் படி, இந்தாண்டின் முதல் மூன்று மாத காலப்பகுதியில் நிறுவனத்தின் பங்குதாரர்களின் நிகர லாபம் சுமார் 743.8 மில்லியன் திர்ஹம்களாக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT