துபாயில் சுற்றிப்பார்க்க மற்றும் விடுமுறையை கழிக்க பல்வேறு இடங்களும் செயல்பாடுகளும் துபாய் முழுவதும் நிரம்பி வழிந்துள்ளன. ஒவ்வொரு வருடமும் சொல்லப்போனால் ஒரு வருடத்திற்குள்ளேயே பல்வேறு புதிய பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா செயல்பாடுகளையும் துபாய் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றது. பொதுவான சுற்றுலா தலங்களுடன் துபாய் மெட்ரோவில் பயணிப்பது, டிராமில் பயணிப்பது, பாம் ஜூமேரா மோனோ ரயில் பயணிப்பது என விதவிதமான போக்குவரத்து வசதிகள் இருந்தாலும் கூட இன்னும் பெரும்பாலானோரால் ஆச்சரியமாக பார்க்கக்கூடிய விஷயம் என்னவென்றால் துபாயில் அவ்வப்போது சாலையில் செல்லும் லிமோசின் (Limousine) கார்தான்.
துபாயில் வசிக்கும் அனைவருக்குமே இதனை பார்க்கும் போது என்றாவது ஒரு நாள் இதில் பயணிக்க வேண்டும் என்பது கனவாக கூட இருக்கலாம். இந்த லிமோசினில் பயணிக்க பெரும் பணக்காரராகவோ, தொழிலதிபராகவோ தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.
ஓரளவு வசதி படைத்தவர்களும் விரும்பினால் லிமோசினில் பயணிக்கும் வகையில் வாடகைக்கு எடுத்துக்கொள்ளும் வசதியும் துபாயில் உண்டு. குறிப்பாக, கோடைகாலங்களில் லிமோசின் சவாரிகள் பிரபலமடைந்து வருகின்றன. இது குறித்த விபரங்களை கீழே காணலாம்.
ஆடம்பரமான தோற்றம்:
லிமோசினில் உள்ள பளபளப்பான இருக்கைகள், வண்ணமயமாக ஒளிரும் விளக்குகள் மற்றும் பொழுதுபோக்கு அமைப்புகளுடன் கூடிய நேர்த்தியான, நீளமான இடவசதி போன்ற அம்சங்கள் இதில் பயணிப்பவர்களுக்கு ஆடம்பரமான உணர்வையும் தனித்துவமான அனுபவத்தையும் வழங்கும்.
மேலும், ஒவ்வொருவரின் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப பல்வேறு பேக்கேஜ்கள் மற்றும் தனிப்பயனாக்கக்கூடிய விருப்பங்களில் சேவை வழங்கப்படுவதால், துபாயில் லிமோசின் சவாரிகளை உங்களுக்கேற்ற பேக்கேஜ் விருப்பங்களில் அனுபவிக்கலாம் என்று பயணத்துறை நிபுணர்கள் கூறியுள்ளனர். அதாவது ஆடம்பரமான Sedan கார்கள் முதல் நீளமான லிமோசின்கள் வரை, வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பம் மற்றும் பாணியின் அடிப்படையில் தங்களுக்கு விருப்பமான வாகனத்தைத் தேர்ந்தெடுக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பயணத்துறை நிபுணர்கள் கூறுகையில், கோடை காலத்தில் லிமோசினில் பயணிப்பதற்கான விலை சற்று குறைவாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், போட்டோ ஷூட்டிற்காக மட்டுமே சில Vloggerகள் லிமோசினில் ஏறினாலும், பயணத்தை விரும்பும் பெரும்பாலான பயண ஆர்வலர்கள் அவர்களது ஆடம்பரமான லிமோசின் சவாரியின் ஒவ்வொரு பகுதியையும் ரசிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதுபோல, பிறந்தநாள் விழா, ஆண்டுவிழா, அலுவலக விழா அல்லது கூட்டம் எதுவாக இருந்தாலும், சுற்றுலாப் பயணிகள், வணிகப் பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் போன்ற அனைத்து வாடிக்கையாளர்களும் லிமோசினுக்குள் சிறப்பான தருணங்களைக் கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகின்றனர் என்றும் கூறப்படுகின்றது.
பயணிப்பதற்கான செலவு:
பயணத்துறையில் உள்ளவர்களின் கூற்றுப்படி, லிமோசின்கள் 8 இருக்கைகள் முதல் 22 இருக்கைகள் வரை பல்வேறு அளவுகளில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு வாகனத்திற்கும் வசூலிக்கப்படும் கட்டணமானது, அதன் அளவு மற்றும் பயண நேரத்தைப் பொறுத்து மாறுபடும் என கூறப்பட்டுள்ளது.
பொதுவாக, 8-10 இருக்கைகள் கொண்ட ஒரு லிமோசின் ஒரு மணி நேரத்திற்கு 450 திர்ஹம்களில் இருந்து தொடங்குகிறது என்றும் 22 இருக்கைகள் கொண்ட லிமோசின்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 1200 திர்ஹம் செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், நகரத்திற்கு வெளியே எனும்போது, தூரத்தின் அடிப்படையில் விலைகள் வேறுபடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எங்கெங்கு பயணிக்கலாம்?
துபாயில் உள்ள எந்த இடத்திலிருந்தும் லிமோசினில் பயணம் செய்யலாம் மற்றும் விருப்பமான எந்தப் பகுதிக்கும் செல்லலாம். இதற்குண்டான கட்டணம் ஒரு மணிநேர அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. பெரும்பாலும் மக்கள் லிமோசின் பயணிக்கும் வழிகளில் உள்ள கட்டிடக்கலையைப் பார்க்க ஆர்வமாக இருப்பதில்லை என்றும், காரில் கிடைக்கும் ஆடம்பர அனுபவங்களைப் பயன்படுத்தவே விரும்புகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன?
இந்த நீளமான மற்றும் ஆடம்பரமான வாகனங்கள் ஜெர்மன் தயாரிப்பு முதல் மற்றும் அமெரிக்க கார்கள் வரை வெவ்வேறு வாகனங்களில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலும் அவை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன அல்லது துபாயில் கூட தயாரிக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.