ADVERTISEMENT

துபாய்: ஒரு நாள் முழுவதும் இலவச அன்லிமிடெட் பைக் ரைடுகளை அறிவித்த RTA & Careem!!

Published: 6 Jun 2023, 1:55 PM |
Updated: 6 Jun 2023, 2:20 PM |
Posted By: Menaka

துபாய் குடியிருப்பாளர்கள் ஒரு நாள் முழுவதும் அன்லிமிடெட் பயணங்களுக்கு இலவசமாக பைக் ரைடுகளை அனுபவிக்கலாம் என்று கூறினால் நம்ப முடிகிறதா? ஆம், துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), பிரபல கரீம் (Careem) நிறுவனத்துடன் இணைந்து எமிரேட் முழுவதும் குடியிருப்பாளர்களுக்கு அன்லிமிட்டெட் பைக் சவாரிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

RTA வெளியிட்டுள்ள தகவல்களின் படி, துபாயில் உள்ள கரீம் நிறுவனத்தின் 186 எலெக்ட்ரிக் பைக் டாக்கிங் நிலையங்களில் (docking stations) இந்த இலவச பைக் ரைடை குடியிருப்பாளர்கள் அனுபவிக்கலாம். அதே போன்று ஒரு நாள் முழுவதும் எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமாக Careem பைக்கை ஓட்டலாம் என்றும், எனினும் ஒரு முறை பயணமானது 45 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் RTA அறிவித்துள்ளது.

மேலும் இந்த ஒரு நாள் இலவச பைக் ரைடு சலுகையை எதிர்வரும் ஜூன் 10, 2023 சனிக்கிழமையன்று குடியிருப்பாளர்கள் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஜூன் 5 அன்று கொண்டாடப்படும் உலக சுற்றுச்சூழல் தினத்தைக் குறிக்கும் வகையில், சுற்றுச்சூழலுக்கு எந்தவித தீங்கும் விளைவிக்காதவாறு ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்க பொது மக்களை ஊக்குவிக்கும் விதமாக RTA இதனை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், RTA வின் இந்த முயற்சியானது துபாயை சைக்கிள் / ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு உகந்த நகரமாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் உத்தரவுகளை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சலுகையைப் பெறுவது எப்படி?

வாடிக்கையாளர்கள் Careem ஆப் மூலம் இந்த இலவச சலுகையைப் பெறலாம். அதற்கு  முதலில் முகப்புத் திரையில் உள்ள “Go” என்ற பிரிவின் கீழ் “Bike” என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர், “One Day” பாஸைத் தேர்வுசெய்து, “Free” என்ற குறியீட்டைப் பயன்படுத்தி இலவச அன்லிமிட்டெட்  ரைடுகளை அனுபவிக்கலாம்.

ADVERTISEMENT

இது வாடிக்கையாளர்களுக்கு 24 மணிநேர அணுகலை வழங்கும். அதேசமயம், பங்கேற்பாளர்கள் தங்கள் கார்டு விவரங்களை உள்ளிட வேண்டும், ஆனால் எவ்வித கட்டணமும் விதிக்கப்படாது. குடியிருப்பாளர்கள் கரீம் பைக்குகளை பொதுவாக, சிட்டி வாக், பிசினஸ் பே, துபாய் மீடியா சிட்டி, கராமா, அல் மன்கூல் மற்றும் கைட் பீச் ஆகிய இடங்களில் பெறலாம்.

கட்டுப்படுத்தப்பட்ட காற்று மாசு:

அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத் தகவல்களின் படி, பிப்ரவரி 2020 இல் கரீம் எலெக்ட்ரிக் பைக் ரைடுகள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, Careem பைக் 2.5 டன்களுக்கு மேல் கார்பன்-டை-ஆக்ஸைடு உமிழ்வை குறைத்துள்ளது. இந்த அளவானது ஆண்டு முழுவதும் கார்பனை உமிழும் 713 கார்களுக்கு சமம் என்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் காற்று மாசுபாடானது துபாயில் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.